Thursday, December 10, 2009

பூப்படைதல் ஒரு நாள் நிகழ்வா ?

வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக் கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில்தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே(menarche) எனப்படுகிறது, இது பூபடைதலின் ஒரு அங்கமே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல11-12 வயதளவில்தான் ஆரம்பிக்கிறது.
ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயே தொடங்கி விடுகிறது.

நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்தியரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகுதான். பாருங்கள் 8வயதில் நிகழவேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந்து கொள்வது 15 வயதில்.

இன்னும் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்ல. இது பெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவடையும் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வாகும்.

பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?

பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இளமுதிர் பருவத்திற்குச் செல்கிறாள். அப்போது அவள் உடல் மற்றும் உளம் என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.

பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சியோடு.
இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில் ஆரம்பிக்கும். அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சி சடுதியாக ஏற்படத் தொடங்கும் தொடங்கும். அதைப்போல உடற் பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும். குறிப்பாக இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காணப்படுவது போன்ற மயிர் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல் , மற்றும் அக்குள் பகுதிகளிலே. ஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்ததாக மெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையை அடையும்.

இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப்படைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங்களின் பின்பே நிகழும். இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப்படைதல் என்று கொண்டாடுகிறோம்.

மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லை. நான் மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.

அனேகமாக ஆரப்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும் . இது ஒழுங்க்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம். இது பற்றி பூரண அறிவு அந்தப் பிள்ளைக்கு தெளிவு படுத்தப் படவேண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமையாகும்.
இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத்தொடங்கும். சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கலாம்.

மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே . உளவியல் மாற்றங்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

அடுத்த பதிவு- ஆண்கள் பூப்படைவது எப்படி.


1 comment:

KANA VARO said...

ஆண்கள் பூப்படைவது எப்படி.///

tell...

this is a one of good blog...