Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, December 2, 2010

நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது



கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது.

அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது.






இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்...
திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்)

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவ முறை

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது 
உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.


இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது.


ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.


நச்சுக்கொடி பிரிதல் -ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது


Placenta  எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறும்.

ஆனால் சில வேளைகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னமே இதுகருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறலாம். இது ஆங்கிலத்திலே Placental abruption எனப்படும் .இது மிகவும் அபாயகரமானது. குழந்தை பிறப்பதற்கு முன்னமே நச்சுக் கொடி கருப்பையில் இருந்து பிரிவதால் குழந்தைக்குத் தேவையான ஒட்சிசன் உட்பட்ட முக்கிய பதார்த்தங்கள் கிடைக்காமல் போவதால் குழந்தை கருப்பையிலேயே இறந்து போய் விடலாம்.

                                           குழந்தை பிறப்பதற்கு முன்னமே பிரிந்த நச்சுக் கொடியில் இரத்தம் கட்டியாகி உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக குழந்தை பிறக்கச் செய்யப் பட முடியோ அவ்வளவு விரைவாக பிறக்கச் செய்யப்பட வேண்டும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சீசர் செய்ய வேண்டி வரலாம். ஆனாலும் சில வேளைகளில் கருப்பைக் வாயில் போதியளவு விரிவடைந்து இருந்தால் சீசர் செய்யாமல் ஆயுதங்கள்  ..பாவிப்பதன் மூலம் குழந்தை பிறக்கச்செய்யப்படலாம்.
.

பொதுவாக இது கர்ப்பம் தரித்து 5-6 மத காலத்திற்குப் பின்பு எப்போதும் ஏற்படலாம்.

அறிகுறிகள்...
1.தொடர்ச்சியான வயிற்று வலி (பிரசவ வலி விட்டு விட்டே ஏற்படும்)
விட்டு விட்டு ஏற்படாமல் தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்பட்டால் அது நச்சுக் கொடி பிரிந்ததால் இருக்கலாம்.

2.பிள்ளைத் துடிப்புக் குறைதல்

3.மயக்கம் வருவது போன்ற உணர்வு

4.சிலவேளைகளில் வயிற்று வலியுடன் சிறிதளவு  ரத்தம் யோனி(பிறப்புறுப்பு) வழியே வெளிப்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

இது எவருக்கு வேண்டுமானாலும் எந்தவிதமான காரணம் இல்லாமலும் ஏற்படலாம்.ஆனாலும் பலமாக வயிற்றிலே அடிபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.மேலும் கர்ப்பகால பிரசர் நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

 ஏற்கனவே சொன்னது போல இந்த நோய் கருப்பையின் உள்ளேயே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.அத்தோடு அதிக இரத்தம் வெளியேறுவது காரணமாக தாயின் உயிருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கு மருத்துவ முறை

குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் உடனடியாக பிறப்புத் தூண்டப்பட வேண்டும். சில வேளைகளில் சீசர் செய்ய வேண்டி வரலாம்.

ஆகவே கர்ப்பம் தரித்து .. மாத காலத்திற்குப் பின் உங்களுக்குத் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டால் எந்தவைதமான உணவுகளையும் வாய் வழியே உட்கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உtங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் நின்றபின் ரத்தம் போவது அபாயமானது !

பதில் 

வணக்கம் டாக்டர்.எனது அம்மாவின் வயது .. .இரண்டு வருடத்திற்கு முன்பே அவருக்கு இறுதியாக மாதவிடாய் ஏற்பட்டது.இப்போது 
மீண்டும் இரண்டு நாளாக ரத்தம் போகிறது. இது நார்மலா? 

பதில்

இல்லை இது நார்மல் இல்லை.
மாதவிடாய் நின்ற பிறகு மீண்டும் ரத்தம் போவது பல காரணங்களால்  ஏற்படலாம்.அந்த வகையில் முக்கியமானது கருப்பை 
சம்பந்தப்பட்ட புற்று நோய்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் இரத்தப் போக்கு ஏற்படும் பெண்கள் உடனடியாக 
வைத்தியரிடம் சென்று கருப்பை சம்பந்தப் பட்ட புற்று நோய்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள  வேண்டும். 
உடனடியாக உங்கள் தாயை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

Tuesday, November 30, 2010

மாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்

....................................................................................................................................................................
முந்திய தொடர்கள் ....

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


பூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)

....................................................................................................................................................................
Premenrual syndrom(PMS) எனப்படுவது பெண்களை வாட்டி எடுக்கும் மாதவிடாயோடு சம்பந்தப்பட ஒரு நோயாகும்.இந்த நோயின் இயல்பானது ஒவ்வொருமுறை மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு வார காலத்தில் ஆரம்பித்து மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மறைந்துவிடும்.

அறிகுறிகள்

  1. அதிகரித்த முகப்பரு
  2. மலச்சிக்கல்(CONSTIPATION)
  3. மன உளைச்சல்(ANXIETY)
  4. மனத்தாழ்வு(DEPRESSION)
  5. நாரி நோ
  6. வயிறு ஊதிய உணர்வு
  7. வயிற்றுக்குள் ஏதோ செய்வது போன்ற உணர்வு(BLOATING)
  8. அதிகமான களைப்பு
  9. இதயம் அதிகமாக துடிக்கும் உணர்வு(PALPITATION)
  10. தலையிடி
  11. மூட்டு நோ
  12. உடலுறவில் நாட்டம் குறைதல்
  13. தூக்கமின்மை
  14. வெளியில் கவனம் செலுத்தமுடியாமை
  15. மார்பக வலி
  16. மார்பகம் வீங்கிய உணர்வு
  17. கைகால் வீங்கிய உணர்வு
  18. உடல் நிறை அதிகரித்தல்
  19. பசிக்குறைவு/சில உணவுகளில் மட்டும் அதிக நாட்டம் 

மேலே சொன்ன அறிகுறிகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன் தொடங்கி மாதவிடாய் ஆரம்பிப்பதோடு மறைவதோடு அவை அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலேயே அவை Premenstrual syndrome எனப்படும்.

இந்த நிலையை பூரணமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆனாலும் குழந்தை பிறந்தவுடன் இதன் தாக்கம் குறைவதாக சொல்கிறார்கள்.

இந்தப் பாதிப்பு ஏற்படும் காலத்தில் வைத்தியரின் அறிவுரை இல்லாமலேயே பெறக்கூடிய சில வலி நிவாரணிகளை நீங்கள் பாவிக்கலாம்.
அவை- பரசிட்டமோல், ப்புருபான்(Ibrufan),மேபினாமிக் அசிட்(mefenamic acid) போன்ற மாத்திரைகள்.

அதுதவிர கீழே உள்ள நடவடிக்கைகள் மூலமும் அதன் பாதிப்புக்களைக் குறைக்கலாம்.
கடலை தானிய உணவுகளை அதிகாமக் உண்ணுதல்
கொழுப்பு கலந்த உணவுகளைக் குறைத்தல்(முக்கியமாக எண்ணெய்)
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணுதல்
மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
கோப்பி , மது அருந்துதலை தவீர்த்தல்
உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்
போதியளவு தூங்குதல்
மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.
(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடரும் ....

.பி.கு-
பெண்களே இது முற்று முழுதாக உங்களுக்கான தொடர்...
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் முன் வையுங்கள் .

நாம் எப்படி வளர்கிறோம் ?

மனிதனின் வளர்ச்சி(Growth) எனப்படுவது` தொடர்ச்சியான உடலியல் மாற்றங்கள் மூலம் ` உயரத்தில் ஏற்படுகிறஅதிகரிப்பாகும். உடல் நிறை அதிகரித்தல்,நகம் வளர்தல்,மயிர் வளர்தல் என்பவை உடற் றொழிப் பாடு ரீதியாகவளர்ச்சி என்ற பதத்துக்குள் உள்ளடக்கப் படவில்லை . .


வளர்ச்சி பல ஹார்மோன்களின் ஒருங்கினைந்த தொழிற் பாடாலே ஏற்படுகிறது.

ஒருவரின் வளர்ச்சி அவர் உட் கொள்ளும் உணவின் அளவு, பிறப்புரிமைக் காரணி(genetic factor), சிறுவயதில் ஏற்படும் மன /உள நோய்கள் என்பவற்றினால் தீர்மானிக்கப்படும்.

மனிதனின் வளர்ச்சியில் உச்சக்கட்ட வளர்ச்சி மூன்று நிலைகளில் ஏற்படும்.
அதாவது ஒரு குழந்தை உருவானதில் இருந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் அதன் வாழ்வின் மூன்று கட்டங்களில் வளர்ச்சி வீதமானது உச்சமாக இருக்கும்.அதுவே Growth spurt. எனப்படும்.

அதிகளவான வேகத்தில் ஒரு மனிதன் வளரும் கட்டங்கள்(growth spurt).

1. கருப்பையின் உள்ளே - கண்ணுக்குத் தெரியாத கலமாக உருவாகி சில மாதங்களிலேயே 50cm வரை குழந்தை வேகமாக வளர்ந்துவிடும்.

2.பிறந்ததிலிருந்து முதலிரு வருடங்கள் - இதற்குப் பிறகும் தொடர்ந்து குழந்தை வளர்ந்து கொண்டே இருக்குமானாலும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாகவே இருக்கும்.

3.பூப்படையும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சி  இருபாலாரிலும் பூப்படையும் காலத்தில் மீண்டும் வளர்ச்சிவேகம் சடுதியாக அதிகரிக்கும். குழந்தைகள் பூப்படையும் பருவத்தில் சடுதியாக உயரத்தில் அதிகரிப்பதை எல்லோரும் அனுபவத்திலேயே பார்த்திருப்போம்..

பூப்படையும் பருவத்தில் ஏற்படும் வளர்ஹ்சி அதிகரிப்போடு ஒரு மனிதனின் உயர வளர்ச்சி முற்றுப் பெற்றுவிடும். எலும்புகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பாக இருக்கும் அமைப்பு செயல் இழந்து எலும்போடு  கலந்துவிடுவதால் 
அதற்கப்புறம் யாராலும் உயரத்தில் வளர முடியாது.

பூப்படைதல் செயற்பாடு முடிவடைவதோடு வளர்ச்சியும் முடிவடைந்து விடும்.

பெண்களிலே பூப்படைதல் 8 வயதளவிலே ஆரம்பித்து 14 -15 வயதளவிலே முற்றுப் பெற்று விடும்.
ஆண்களிலே பூப்படைதல் 9  வயதிலே ஆரம்பித்து  15-16வயதளவில் முடிவடைந்திவிடும்.
அத்தோடு அவர்களின். வளர்ச்சியும் முடிவடைந்துவிடும்.

இதுவே பொதுவாக  சாதாரனமானவர்களில் நடைபெறும் செயற்பாடாகும்.

பி.கு- எனது முன்னைய   இந்தப் பதிவிலே பின்னூட்டம் இட்ட நண்பர்களின் சந்தேகம்  இப்போது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அங்கு பின்னூட்டம் இட்ட ஒரு நண்பர் மனிதன் 21 வயது வரை வளர்வதாக சுஜாத்தா சொல்லியிருப்பதாக சுட்டிக் காட்டினார். சுஜாத்தா .சரியான தகவலை பெறாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டு எழுதியிருப்பார்.விட்டு விடுங்கள்..

.

வேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக்கலாம்?

கேள்வி

டாக்டர் ! நீங்கள் ஒரு பதிவில் குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று எழுதி
இருந்தீர்கள். நான் இருக்கும் நாட்டில் மூன்ருமாதத்திலேயே வேலைக்குப் போக வேண்டும். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைக்குப் பிரச்சினை ஏதாவது ஏற்படலாமா?

பதில்

நீங்கள் வேலைக்குப் போவதால் புட்டிப் பால்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை இல்லை.நீங்கள் வேலைக்குப் போகும் நாட்களில்
உங்கள் தாய்ப்பாலை ஒரு சுத்தமான கண்ணாடிப் பாத்திரத்திலேயே எடுத்து(கறந்து ) வைத்து விட்டுப் போங்கள்.
வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்பவர்களை புட்டிப் பாலுக்குப் பதிலாக உங்கள் தாய்ப்பாலைக் கொடுக்கச் சொல்லுங்கள்.

தாய்ப்பால் குளிரூட்டி இல்லாமல் நான்கு மணிநேரம் வரை பழுதடையாமல் இருக்கும்.
குளிரூட்டியில் வைத்தால் பல வரங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.
அதே நேரம் தாய்ப்பாலை deep freezer யில் வைத்தால் பல மாதங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.

அதனால் வேலைக்குப் போவதொன்றும் தாய்ப்பால் கொடுப்பதற்கான தடை அல்ல.

Monday, November 29, 2010

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை

குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது என்பதால் அதிகமான உணவை ஒரே தடவியில் ஏற்று சமிபாடு அடையச் செய்ய முடியாது. அதனால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

இதற்கும் வரையறை இல்லை .எத்தனை வருடத்திற்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும் முதல் 5-6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாத முடிவில் தாய்ப்பாளினால் தனியே குழந்தைக்குரிய போசாக்கினை வழங்க முடியாது போவதால் மற்றைய உணவுகளை ஆரம்பிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா?

நிச்சயமாக .அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்வது எப்படி?

தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குழந்தை மார்பகத்தை உறிஞ்சும் போதே தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதுதவிர தாய் போதியளவு நீராகாரம், பழ ரசம் போன்றவை அருந்த வேண்டும்.

தொடரும்.....

Friday, November 26, 2010

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.

கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோ



பூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)

முந்திய இடுகையில் பூபடைதலின் போது ஏற்படுகின்ற நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லி இருந்தேன்.ஒவ்வொரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும். 
சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோசப் பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவின்மையால் பல மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
இதைத் தவீர்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படைதலின்  போது நடைபெறும் மாற்றங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வேண்டும். இந்த அறிவினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.
பூப்படைதலின்  முதற் கட்டமாக ஒரு பெண்ணின் மார்பு வளர்ச்சி ஆரம்பிக்கும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியமாக இருக்கலாம்.தொடர்ந்து அவர்களின் அக்குள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் மயிர்கள்
வளருதல். இந்த புதிய மாற்றங்கள் அவர்களின்  பூப்படைதலின்   ஆரம்ப நிலை என்றும் இதுவே ஒவ்வொரு பெண்ணிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு என்றும் அடிப்படை அறிவை அந்த பெண்ணிற்கு புகட்டவேண்டியது பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக தாய் இது பற்றி தன் பெண்ணோடு மனது விட்டு உரையாட வேண்டும்.

இந்த நேரத்திலேயே அடுத்தகட்டமாக ஆரம்பிக்கப்போகும் மாதவிடாய் பற்றி அது ஆரம்பிக்கும் முன்னமே எடுத்துக் கூறி அதை அந்தக் பிள்ளை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

சிலவேளைகளில் தாய் மாதவிடாய்  காரணமாக சில அசௌகரியங்களை சந்திப்பவராக இருக்கலாம். ஆனாலும் தன் பிள்ளையிடம் அது
பற்றி கூறாமல் மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணிலும் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு  என்றும் அதுவே அவர்களின் பெண்மைக்கு 
அடையாளமாக அமைவதோடு பிற்காலத்தில் அவர்களிற்கு தாய்மைத் தன்மையை  அழிக்கப் போவது என்று கூறி அவர்களை மாத விடாயை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுபடி செய்ய வேண்டும்.அத்தோடு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கினை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் பூரணமான அறிவை அது ஏற்படுவதற்கு முன்னமே ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

மேலும் மாதவிடாய்  சம்பந்தமாக அந்தப் பெண் பிள்ளையின் மனதிலே நிறையச் சந்தேகங்கள் எழலாம். குறிப்பாக,
1. மாதவிடாய் காலத்தில்எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?
2.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?
3.மாதவிடாய் காலத்தில் தான் குளிக்கலாமா?
4.மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கலாம்.தாய் இதுபற்றி தானாகவே பேசத் தொடங்கி இது பற்றிய விபரங்களை பெண்ணுக்கு முழுமையாக தெரியப் படுத்த வேண்டும்.

குறிப்பாக மாதவிடாய் மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டாலும் சரியாக எத்தனை நாளுக்கு ஒருமுறை ஏற்படும் என்பது பெண்ணுக்கு பெண் வேறுபாடும்.
21.நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்று தெரியப்படுத்த வேண்டும் .அதாவது சில பெண்களிலே 21 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும்.சில பேர்ல32  நாட்களுக்கு ஒருமுறையோ அல்லதுசில பேரிலே 35  நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படலாம். 

21 தொடக்கம்  35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்றும் இது சரியாக ஒவ்வொரு மாதத்திற்கும்(30நாட்கள்) 
ஒருமுறைதான் ஏற்பட வேண்டியதில்லை என்றும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்ததாக மாதவிடாய் காலத்தில் மிதமான வயிற்று வலி ஏற்படலாம் என்றும் இது சில நாட்களுக்கே இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி 
வைக்க வேண்டும்.மேலும் மாதவிடாய் காலத்தில் சாதாரணமான நடவடிக்கைகள் (சைக்கிள் ஓடுதல், நடனமாடுதல், விளையாடுதல்)போன்றவற்றிலும் ஈடுபடலாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் பெண் பிள்ளையை மாதவிடாய் ஆரம்பத்தினாலும் , பூப்படைதளினாலும் ஏற்படப் போகும்
மாற்றங்களை எதிர்கொள்ளும் முகமாக தயார் படுத்த வேண்டும்.. 

தொடரும் 
இது பற்றிய உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்...

குழந்தைகளுக்கு வரும் மாதவிடாய்

சில பெண் குழந்தைகளுக்கு பிறந்து சில நாட்களுக்கு பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தப் போக்கு இருக்கலாம். இது கருப்பையில் இருக்கும் போது அம்மாவில் இருந்து குழந்தைக்குச் சென்ற சில ஹார்மோன்களினால் ஏற்படுவது.

அதாவது அம்மாவின் ரத்தத்தில் இருக்கும் ஹார்மோன்கள் பிள்ளையின் ரத்தத்தில் கலந்து மாதவிடாயை ஒத்த மாற்றத்தை அந்தக் குழந்தையில் ஏற்படுத்தும் இதனால் குழந்தை பிறந்து சில நாட்களுக்கு சிறிதளவு இரத்தப் போக்கு இருக்கும். இது சாதாரணமான ஒரு நிகழ்வாகும். இதற்காக எந்தப் பெற்றோரும் அச்சப்படத் தேவை இல்லை.

எல்லாக் குழந்தைகளுக்கும் இது ஏற்படாது.

Thursday, November 25, 2010

ஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...

கேள்வி

Dear Sir,

How are you? I am ... and am 27 years of age..I am worrying very much on following problems,

I will come to the matter directly,

I am feeling that I have yeast (fungus) infection on my penis..

Symptoms are,
1. Bad smell
2. Kind of white solid liquid (not much) on Penis -  I have to clean it everyday
3. Itching (rarely)

Due to this I am put on hold on my marriage. So please advice me how to cure this and what kind of medicine I have to take.

Regards,//
(டாக்டர் எனக்கு ஆணுறுப்பிலே பங்கசு தொற்று இருப்பதாக உணர்கிறேன்.எனக்கு ஆணுறுப்பிலே வெள்ளை
நிரவத் திரவம் வெளியேறுவதுடன் அரிதாக கடித்தன்மையும் உள்ளது?


பதில்

நண்பரே உங்களுக்கு பங்கசுத் தொற்று இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகள் ஆனால் பங்கசுக்களின்வீரியத்தன்மை சாதாரனமானவர்களில் அவ்வளவு எளிதாக நோயினை ஏற்படுத்தப் போதுமானதல்ல.அது வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் , மற்றும் வேறு நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களிலேயே நோயினை ஏற்படுத்தும் .மேலும் பங்கசுக்களால் துர் நாற்றம் ஏற்படுவதுமில்லை.

துர் நாற்றம் ஏற்படுவது பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படலாம்.

எல்லாவிதமான பக்டீரியாக்களும் பூரணமாகக் குணப்படுத்தப்படலாம்.

நீங்கள் உங்கள் ஆணுறுப்பிலே காயங்கள் அல்லது தழும்புகள் மற்றும் வலி உள்ளதா என்று கூறாதபடியால் என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாமல் உள்ளது.

ஆனாலும் நீங்கள் மனதளவிலே இது காரணமாக உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாகஒரு வைத்தியரை நாடுவது உகந்தது.
நீங்கள் நாட வேண்டியது ஒரு பொது சத்திர சிகிச்சை நிபுணரை.

அச்சப்படாமல் ஒரு வைத்தியரை நாடுங்கள்.
அப்படி உங்களுக்குத் தொற்று இருந்தாலும் சில வாரங்களிலே அவை பூரணமாகக் குணப்படுத்தப்பட்டு நீங்கள் திருமண பந்தந்தத்தில் இணைந்து கொள்ளலாம்.

கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் வைத்தியரிடம் செல்லுங்கள். உங்களுக்கு அப்படியான தொற்றுக்கள் இருப்பின் அவை உங்கள் துணைக்கும் தொற்றிக் கொள்ளலாம்.

கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அறிந்து கொள்வதெப்படி?

கேள்வி

டாக்டர் எனது மனைவி நான்கு மாத கர்ப்பிணி.வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.இந்த நேரத்தில் மனைவியின் இடதுபக்க மார்பு பெரிதாக இருந்தால் ஆண் குழந்தையே பிறக்கும் என்று எனது
நண்பர் ஒருவர் சொன்னார்.அது உண்மையா?
(தமிழாக்கம்)

பதில்

ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு மார்பகங்களின் அளவும் சாதாரணமாகவே வேறுபட்டதாகவே இருக்கலாம்.அதை வைத்துக் கொண்டு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதெல்லாம் மூட நம்பிக்கை.
கர்ப்பையில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்கான ஒரே வழி ஸ்கேனிங் செய்து கொள்வதே.நீங்கள் ஒரு மாகப் பேற்று வைத்தியரிடம் சென்று ஸ்கேனிங் செய்து என்ன குழந்தை என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
(நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள் என்று சொல்லவில்லை .சில நாடுகளில் கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று சொல்லுவது சட்டப்படி குற்றம். அவ்வாறான நாடுகளில் குழந்தை பிறக்கும் வரை
காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை)

இதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா ?


கேள்வி 

எனது தோழிக்கு திருமணம் நிச்சய்க்கபட்டுள்ளது அவளுக்கு பார்த்துள்ள பய்யனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது அறுவை சிகிச்சை பண்ணினார்கல் இதனால் அவளது திருமண வாழ்க்கயில் எதாவது பிரச்சனை வருமா அவர் இப்பொளுது எந்த மருந்தும் எடுத்து கொள்ள வில்லை //


பதில்

இதயத்தில் ஓட்டை என்பதை வைத்துக்கொண்டு எந்தவிதமான பிரச்சினை என்று என்னால் ஊகிக்க முடியாது.ஆனாலும் சத்திரசிகிச்சை
செய்துகொண்டு இப்போது அவர் எந்த விதமான மருந்துகளும் உட்கொள்ளவில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு 
சிக்கல் இல்லாத ஏதோ ஒரு பிரச்சினைதான் இருக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் என் அனுமானத்தில் எதையும் கூறாமல் 
பொதுவான ஒரு கருத்தை உங்களுக்கு பதிலாக தருகிறேன்.

பிறப்பிலே ஏற்படும் ஏராளாமான இதய நோய்கள் இப்போது பூரணமாக குணப்படுத்தப்படலாம். அந்த வகையில் அந்த ஆணுக்கும் 
பூரணமாக குணமாகி இருக்கும் என்று நம்புகிறேன்.அடுத்து இந்தவகையான இதய நோய் ஆணுக்கு இருப்பதால் திருமண பந்தத்தில்
எந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் இல்லை.
மாறாக பெண்ணுக்கு இதய நோய் இருந்தால்  குழந்தைப் பேற்றில் சில பிரச்ச்சினைகள் ஏற்படலாம்..அதுவும் மிகவும் அரிதானதாகவே!

உங்கள் தோழி அவரை மணம்முடித்து சந்தோசமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன். என்ன வகையான சத்திர சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளது சொன்னால் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியும்.

புதிதாக திருமணம் முடித்தவர்களுக்காக

கேள்வி

Dear Sir,
வணக்கம்,
எங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது, அனால் குழந்தை
இல்லை எங்கலுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
எதாவது குறை இருக்குமோ என்று உள்மனம் வருத்தபடுகிறது எதாவது வழி
 இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ் .


என்றும் உண்மையுடன் 
//


பதில்

உங்கள் கேள்வியைக் பார்த்துவிட்டு ஒரு கணம் சிரித்தே விட்டேன். நீங்கள் திருமணம் முடித்து இரண்டே மாதங்களில்இந்தப் பயம் உங்களுக்குத்தேவையா?
நண்பரே உங்கள் மனைவியின் வயது 35 ற்கு குறைவானது என்றால் ஒரு வருடம் வரை காத்திருங்கள்.
மனைவியின் வயது 35 இற்குமேல் என்றால் ஆறு மாதமாவது காத்திருங்கள்.
இதையும் வாசியுங்கள் உதவியாக இருக்கும்.இந்தக் காலப்பகுதியில் உங்கள் மனைவி கர்ப்பமடையாமல் விடும் பட்சத்திலேயே நீங்கள் வைத்தியரின் உதவியை நாடவேண்டும்.


அதுவரை தேவை இல்லாததைச் சிந்தித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் சந்தோசமாக இருங்கள்.

கீழே உள்ள சுட்டியில் உள்ள இடுகையும் உங்களுக்கு உதவலாம்.

குழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா?

நான் எழு மாதக் கர்ப்பிணி.எனக்கு நேற்று மார்பிலிருந்து மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியது.இன்றும் என் உள்ளாடை நனைந்திருந்தது.
 நான் வெளிநாட்டில் கணவருடன் தனியாக இருப்பதால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.நல்லவேளையாக இன்று உங்கள்
தளத்தை பார்க்க பின் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?இது ஏதாவது நோயின் அறிகுறியா?
(தமிழாக்கம்)

பதில்

நல்லது சகோதரி. நீங்கள் நேரு மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியதாக சொன்னிர்கள்.இது அனேகமாக கடுப்புப் பால் எனப்படும் colostrum  என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து இன்று வெளியேறுவது சாதாரண பாலாக இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.எதற்கும் நீங்கள் உங்கள் மார்புகளை அழுத்தி வெளியேறுவது பால்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியேறுவது பால்தான் என்றால் அச்சப்படத் தேவை இல்லை.குழந்தை பிறக்கும் முன்பே பால் வெளியேறுவது சாதாரண நிகழ்வாகும்.

வெளியேறுவது பால் இல்லாவிடில் அல்லது ரத்தம் கலந்திருப்பின் வைத்தியரை  நாடுவது உகந்தது.

Wednesday, November 24, 2010

ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?

கேள்வி 

வணக்கம் டாக்டர். 
உங்கள் அறிய சேவைக்கு நன்றி.நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்.ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை.
இதற்கு நான் என்ன செய்ய முடியும்.
(தமிழாக்கம்)

பதில்.

ஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் 
உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது.அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள்
வருடத்திற்கு .150  முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது. 
இது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும்.

நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது..

நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு..இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.
நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது.

ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும்.இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே  இருக்கும்.

ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும்.ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்)

பெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை  வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.

அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.

இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு  உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.
..
அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை  ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது..
ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம்  இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.

Tuesday, November 23, 2010

உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி ?

ஒவ்வொருவருக்கும் தன் குழந்தையின் உருவம் / அழகு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.உயரக் குறைவு நிறையப் பேரின் மனத் தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.உயரம் என்பது தனியே உண்கின்ற உணவினால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை.

உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியே(genetic factor) ஒருவர் இறுதியில் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிப்பார் என்று தீர்மானிக்கிறது. இதுGrowth potential எனப்படுகிறது. இவ்வாறு பிறப்புரிமைக் காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை விடஅதிகமாக  நாம் எவ்வளவுதான் உணவை உட்கொண்டாலும் நம்மால்  வளர முடியாது.

ஆனால் வளர்ச்சிக் காலத்தில் தேவையான அளவு உணவு வழங்கப் படாவிடால் பிறப்புரிமைக்  காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை ஒருவர்  அடையாமலேயே அவருடைய வளர்ச்சி முற்றுப் பெற்று விடலாம்.

இதே போல் குழந்தைகளுக்கு சிறுவயதிலே கட்டுப்படுத்தப் படாத தொடர்ச்சியான நோய்கள் (ஆஸ்த்மா /நீரழிவு)போன்றவை ஏற்பட்டாலும் அவர்களால் அவர்களின் உச்சகட்ட க் உயரத்தை அடைய முடியாமல் போகும்.
அதேபோல் சிறு வயதில் மன உளைச்சலுக்கு உட்பட்டு வாழும் குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.இது தவீர நேரடியாகவே ஒருவரின் வளர்ச்சியைத் தடுக்கும் நோய்கள் இருக்கின்றன.

ஒருவரின் உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தந்தையரின் உயரம். பிறப்பிலே உயரம் குறைந்த தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளும்உயரம் குறைவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும் என்று அறிய ஆவலாக இருக்கும்.

அதற்காக இந்தச் சுட்டியில் சென்று அங்கே உள்ள கணிப்பானில் உங்கள் உயங்களைக் கொடுப்பதன் மூலம்அறிந்து கொள்ளுங்கள்.அதிலே உங்கள் குழந்தை  வளரக் கூடிய சாத்தியமான உயரமே கிடைக்கும்..உங்கள் குழந்தைக்குரிய சூழல்,உணவு,மருத்துவ வசதிகளைப் பொறுத்தே அந்த உயரத்தை அடையுமா என்பது தீர்மானிக்கப்படும் .

உங்கள் சந்தேகங்களை முன் வையுங்கள் .

கர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்



உலகிலேயே அதிகளவான கர்ப்பிணிகளின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்
நோய் கர்ப்பகால உயர் குருதியமுக்கமாகும்(பிரஷர்).இது pregnancy induced hypertension  எனப்படும் .

கர்ப்பகால பிரஷர் நோய் எனப்படுவது பிரஷர் நோய் இல்லாத ஒரு பெண்ணிலே கர்ப்பம் 
தரித்தபின் பிரஷர் நோய் ஏற்படுவதாகும்.

இது பல பாரதூரமான விளைவுகளை தாய்க்கும் ,குழந்தைக்கும் ஏற்படுத்தலாம்.

பொதுவாக இந்த நோய் கர்ப்பம் தரித்து 20 வாரங்களுக்குப் பிறகே ஏற்படும்.

இது தீவிரத்தன்மையைப் பொறுத்து பல கட்டங்களாகப் பிரிக்கப்படும்.

1.பிரஷர் மட்டும் கூடிய நிலை
2.அதிகரித்த பிரஷரோடு சிறுநீரிலே அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறும் நிலை 
( வெளியேறும் புரதத்தின் அளவைப் பொறுத்து இந்த நிலை இன்னும் பிரிக்கப்படும்)
3.மேற்சொன்ன இரண்டோடும் வலிப்பு ஏற்படும் நிலை (eclampsia)

இறுதி நிலையானது மிகவும் பயங்கரமானது.சிறிது நேரத்திலேயே தாயையும் பிள்ளையையும் கொன்று விடக்கூடியது.

பிரஷர் மட்டும் கூடியுள்ள ஆரம்ப நிலையிலே மருந்துகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.
ஆனாலும்  பிரஷரை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தமுடியாமல் போகும் நிலையில் அல்லது புரத வெளியேற்றம் அதிகரிக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு குழந்தையைப் பிறக்கச்செய்வதுதான்

வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக குழந்தையை பிறக்கச்  வேண்டும்.

சில வேளைகளில் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தாயைக் காப்பாற்றும் பொருட்டு 7 மாதமளவிலேயே(சிலவேளை அதற்கு முன்னும் ) குழந்தையை பிறக்கச் செய்ய வேண்டி வரலாம்.அந்த நிலையில் குழந்தையை விட தாயின் உயிரே கவனத்தில் கொள்ளப்படும்.

குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் பிரஷர் தானாக சரியாகிவிடும்.

ஆகவே பெண்களே! 

1.நீங்கள் கர்ப்பம் தரித்த பின் மாதம் ஒருமுறையாவது உங்கள் பிரஷரை சோதித்துக்கொள்ள வேண்டும்.
2.உங்களுக்கு பிரஷர் நோய் ஏற்பட்டால் எந்த நிமிடமும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
3.பிரஷர் நோய் ஏற்பட்டவர்கள் மிகவும் கவனமாக வைத்தியரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
4.சில வேலை நீண்ட நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருக்கவும் வேண்டிவரலாம்.
5.சிலவேளைகளில் உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு குழந்தையை தியாக செய்யவேண்டியும் வரலாம் 


கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரஷர் நோய்க்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்படும் தேவை இல்லை

மேலே சொன்ன பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரஷர் நோயிலே ஏற்படும். மாறாக பிரஷர் நோய் ஏற்கனவே உள்ள  ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படாது.


இது பற்றிய மேலதிக சந்தேகங்களை முன் வையுங்கள்.

கர்ப்ப கால நீரழிவு.

சில கர்ப்பிணிகளுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் மட்டும் நீரழிவு நோய் ஏற்பட்டு குழந்தை பிறந்தபின் சுகமாகிவிடலாம்.

இதை எவ்வாறு கண்டு பிடிக்கலாம்?

ரத்தப் பரிசோதனை மூலமே இது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
கர்ப்பகாலத்திலே சாதாரணமானவர்களின் சிறு நீரிலே கூட சீனி காணப்படுவதால் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் நீரழிவு நோய் உள்ளதா என்று உறுதிப் படுத்திக்கொள்ள முடியாது.

கர்ப்பகால நீரழிவுக்கும் கர்ப்பம் அற்றவர்களில் ஏற்படும் நீரழிவுக்கும் என்ன வித்தியாசம்?

கர்ப்பகால நீரழிவு குழந்தைப் பிறப்போடு பூரணமாக சுகமாகிவிடும்.ஆனால் மற்றவகையான நீரழிவு பூரணமாக சுகமாவதில்லை. வாழ்நாள் பூராகவும் மருந்து எடுக்கவேண்டி வரலாம்.

கர்ப்ப கால நீரழிவானது கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களுக்குப் பிற்பட்ட காலத்திலே ஏற்படும்.ஆகவே கர்ப்பம் உண்டாகிய ஒவ்வொரு பெண்ணும் ஆரம்பத்திலே (முதல் மூன்று மாதத்துக்குள்)சீனியின் அளவை சோதித்தறிந்து கொள்ளவேண்டும்.அந்த ஆரம்பகாலத்தில் நீரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அது கர்ப்பகால நீரழிவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் குறைவு.

அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்தவுடன் உங்கள் சீனியின் அளவை சொத்திதுப் பார்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே சீனி அதிகமாக இருந்தால் அது கர்ப்ப கால நீரழிவாக இருக்க முடியாது. மாறாக உங்களுக்கு இருப்பது நாட்பட்ட
நீரழிவாக இருக்கலாம்.
அதேவேளை ஆரம்பத்தில் சீனியின் அளவு சாதாரணமாக இருப்பவர்கள் மீண்டும் 5-6 மாதமளவில் சீனியை சோதித்தறிய வேண்டும்.
அப்போது அவர்களுக்கு நீரழிவு இருந்தால் அதுவே கர்ப்பகால நீரழிவு.
அதாவது கர்ப்பம் உருவாகும் போது நீரழிவு இல்லாத ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் உருவாகிய பின் நீரழிவு ஏற்பட்டால் அதுவே கர்ப்பகால நீரழிவு.

கர்ப்பகால நீரழிவு ஏற்பட்ட குழந்தைகளுக்கு அந்த நீரழிவினால் அங்கக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை.

ஆனாலும் அந்தக் குழந்தைகள் நிறை அளவுக்கதிகமாக கூடிவிடுவதினால் பிறக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் கருப்பையினுள்ளே நீரின்( அம்நியோட்டிக் திரவம்)  அளவு அதிகரிப்பதாலும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.




நீரழிவு நோயுள்ள  தாய்க்குப் பிறந்த பிறந்த நிறை கூடிய குழந்தை.

மிகவும் முக்கியமாக நீரழிவு நோய் உள்ள கர்ப்பிணியின் குழந்தை கருப்பையினுள்ளே திடீரென எந்தவிதமான காரணக்களும் இல்லாமல் இறந்தும் விடலாம்.இவ்வாறு இறப்பு நடைபெறுவது குறிப்பாக கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில்.அதனால் நீரழிவு நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும் தினமாக கொடுக்கப்பட்ட தினத்திற்கு
இரு வாரங்களுக்கு முன்னமே குழந்தை பிறக்கச் செய்யப்படுகிறது.அதற்கர்பால் கருப்பையில் குழந்தை இருப்பது
குழந்தைக்கு ஆபத்தாக அமையலாம்.

மேலே சொன்ன பாதிப்புக்களை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு அவர்களின் சீனியின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சீனிக் கட்டுப்பாடு ஆரம்பத்தில் உணவு முறை மூலம் முயற்சி செய்து முடியாமல் போனால் இன்சுலின் மூலம் மேற்கொள்ளப்
படும். இன்சுலின் தவிர்ந்த எந்த மாத்திரையும் கர்ப்பகாலத்தில் பாவிக்கப் பட முடியாது.

குழந்தை பிறந்த பின் அவர்களின் நீரழிவு பூரணமாக குணமாகிவிடும்.
ஆனாலும் கர்ப்ப காலத்தில் நீரழிவு ஏற்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் சாதாரணமான நாட்பட்ட நீரழிவு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருடம் ஒரு முறையேனும்
நீரழிவு உள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்தில் முன்வையுங்கள் .