Saturday, March 20, 2010

கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது ..

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம.
இங்கே நான் கருப்பையில் வருகின்ற கட்டிகள் பற்றி ஒரு இடுகையிடுகிறேன்.

கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் என்ன?

இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.





தனியாக ஏற்பட்ட ஒரு கட்டி




கருப்பையில் பல கட்டிகள்

இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?


இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45வயதிலே இருக்கும் 100 பெண்களை  எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

இது புற்று நோயா?

இல்லை. இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.

இது எத்தனை வயதளவில் ஏற்படும்?

பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம்.

இது என்ன வகையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்?


நான் ஏற்கனவே சொன்னது போல இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.

  • மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
  • அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு 
  • அடிவயிறு வீங்குதல் 
  • அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
  • நாரிப் பகுதியின் அடிப்பகுதியில்  நோ ஏற்படுதல்

குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?


ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற  இடத்திலே ) இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.

ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு .மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும் அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக  இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதி[ப்பும் ஏற்படுவதில்லை.

இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?


சில வேளைகளில்.
குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை) மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.

இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்?

ஸ்கேனிங் மூலம்

இதற்கான மருத்துவ முறைகள் என்ன?


இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.

இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy). குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப் பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.

4 comments:

Kandumany Veluppillai Rudra said...

மக்களுக்கு தேவையான இடுகை,இவ்வள்வு விசயம் இருக்கா பெண்களின் வயிற்றில்

இராகவன் நைஜிரியா said...

நன்றி. Fibroid கட்டிகள் பற்றிய சந்தேகங்களில் - இது பிரச்சனை கொடுக்காத வரை - அகற்றப் படவேண்டியது இல்லை என்பது கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

Fibroid கட்டி இருந்தால் தைராய்ட் பிரச்சனையும் உருவாகும் என்றுச் சொல்லுகின்றார்களே? இது சரியா?

கண்ணகி said...

தெளிவான பதிவு...நல்ல தகவல்...

பொன் மாலை பொழுது said...

மிக அவசியமான செய்திகள். நல்ல பதிவு. இளம் தம்பதியினருக்கு அவசியமான ஒன்று.