Thursday, December 16, 2010

ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.


உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 
  1. அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
  2. சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
  3. நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
  4. பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )


இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

  1. தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
  2. குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
  3. துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
  4. எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
  5. தவழுதல் -------- 8மாதம்
  6. எழுந்து நிற்றல் -------- 9மாதம்
  7. பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
  8. துணையின்றி நடத்தல் ---------12மாதம்
  9. ஓடுதல் -------- 15மாதம்
  10. ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
  11. மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம


மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..

அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்

  • தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
  • குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
  • அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல் 

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை

  • ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல் 
  • நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
  • நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தமானவை

  • இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல் 
  • தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல் 
  • சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
  • விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல் 
  • தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை

  • சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல் 
  • மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்

பேச்சு


  • நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல் 
  • தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
  • கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தப்பட்டது

  • சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
  • சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
  • துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை

  • மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல் 
  • இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
  • தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்


பேச்சு

  • அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
  • வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
  • மற்றவர்களோடு பேச முயற்சித்தல் 
  • வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல் 
  • பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்

Monday, December 6, 2010

திருமணம் முடிக்கப் போகும் /கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் அறிய வேண்டியது

போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லதுஅங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம் .

இதைத் தடுப்பது மிகவும் இலகு .கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த மாத்திரையை வைத்தியரின் துண்டு இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் கம்மி. கருத்தரித்த பின் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு இந்த மாத்திரை உட்கொள்ளப்பட வேண்டும்.கருத்தரித்து மூன்று மாதத்திற்கு பின் இந்த மாத்திரையை எடுக்க வேண்டியதில்லை.

ஆகவே திருமணம் முடிக்கப்போகும் பெண்களே திருமணம் முடித்தவுடன் குழந்தைக்காக முயற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் திருமணத்திற்கு முன்பே போலிக் அசிட் மாத்திரையை பாவியுங்கள்.

Sunday, December 5, 2010

குழந்தைப் பிறப்பின் பின் எத்தனை நாட்களுக்கு இரத்தம் போகும் ?

கேள்வி 

டாக்டர் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதமாகியும் தொடர்ச்சியாக இரத்தம் போகிறது.இவ்வாறு எத்தனை மாதம்
வரை இரத்தம் போகலாம்.?

பதில் 

குழந்தை பிறந்து சில நாட்களுக்கு பெண்ணுறுப்பு வழியே இரத்தம் போன்ற திரவம் தொடர்ச்சியாக வெளிவரும்.
இது முற்று முழுதாக இரத்தம் அல்ல .இரத்தத்தோடு ,கருப்பையின் உட்பகுதியில் இருந்து பிரிந்து வரும் பகுதிகள் 
போன்றவையோடு வேறு பல சுரப்புகளும் சேர்ந்து வெளிவரும். இது லோக்கியா ..எனப்படும். ஆரம்ப ஒரு வாரகலத்திற்குள்
இவ்வாறு வெளிவருவது சிவப்பு நிறமாக இரத்தம் போலவே இருப்பதால் அது ரெட் லோக்கியா எனப்படும்.
அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அதன் நிறம் இள மஞ்சள் நிறமாகவும் பின்பு வெள்ளை நிறமாகவும் வெளியேறும்.

அப்படியல்லாமல் குழந்தை பிறந்த பின்பு தொடர்ச்சியாக இரத்தமே வெளியேறுகிறது என்று நினைப்பவர்கள் உடனடியாக 
வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். குழந்தை பிறந்து ஒரு நாளின் பின் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறினால் கூட 
அசாதாரணமானது.

Saturday, December 4, 2010

வெளியேற வேண்டிய சாதாரண விந்தின் அளவு

கேள்வி 

டாக்டர் நான் சுய இன்பத்தில் ஈடுபடும் போது மிகவும் குறைவான அளவிலேயே விந்துகள் வெளியேறுவதாய் உணர்கிறேன்.
இதை எப்படி சரி செய்வது.(தயவு செய்து பெயர் வெளியிட வேண்டாம்)

பதில்

விந்து(Sperm) எனப்படுவது கண்ணுக்குத் தெரியாத அமைப்பு.அதை உங்கள் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. வெளிவருகின்ற திரவம் சுக்கிலப் 
பாயம்( Seminal fluid)எனப்படும். இதிலே விந்துகள் கலந்திருக்கும். விந்துகள் தவீர சுக்கிலப் பாயத்தில் விந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான 
பல்வேறு பதார்த்தங்களும் கலந்திருக்கும்.ஒருதடவையில் வெளியேறும் சுக்கிலம் பாயத்தின் அளவு இரண்டு மில்லி லீட்டருக்கும்
அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.2 மில்லி லீடர் என்பது மிகவும் சிறிய அளவு.அதனால நீங்கள் மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

Friday, December 3, 2010

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.

விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்புக்கள் சாதாரணமான முறையிலே தொழிற்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு சுக்கிலப் பாயம் வெளியேறலாம்.சுக்கிலப் பாயம் வெளியேறும் அனைவரிலும் விந்துகளின் அளவு போதுமானதாக இருக்கும் என்றில்லை.
ஆகவே குழந்தை உருவாகுவது பிற்போகும் சந்தர்ப்பத்தில் ஆண்களின் சுக்கிலப் பாயம் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்துகளின் வீரியத் தன்மை  கணக்கடுக்கப் பட வேண்டும்.

விந்துகளின் வீரியத்தன்மை பிரதானமாக மூன்று விதங்களில் கணக்கெடுக்கப்படும்.


1.விந்துகளின் எண்ணிக்கை -
சாதாரணமாக 1மில்லி லீடர் சுக்கிலப் பாயத்தில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்

2.விந்துகளின் முன்னோக்கி அசையும் தன்மை (active motile)
மொத்தமாக உள்ள விந்துகளில் .குறைந்தது 50 வீதமானவை இந்தத் த்னமையைக் கொண்டிருக்க வேண்டும்

3.விந்துகளின் உருவ அமைப்பு(Morphology) 
மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 வீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்



.அத்தோடு ஒரு தடவையில் வெளியேறும் சுக்கிலப் பயத்தின் அளவு 2 மில்லி லீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்துகளே கருத்தரித்தலுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.

விந்துகளின் எண்ணிக்கை குறைதல் ஒலிக்கோ ஸ்பேர்மியா (Oligospermi)எனப்படும். இவ்வாறனவர்களுக்கு கருத்தரிக்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும். கருத்தரித்தல் பிற்போகும் சந்தர்ப்பத்தில் இவர்களின் சுக்கிலப் பாயம் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு (processed)பொருத்தமான விந்துகளை மட்டும் சேகரித்து IUI முறைமூலம் மனைவியின் கருப்பையினுள் செலுத்தப் படுவதன் மூலம் கருக்கட்டலை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.(IUI பற்றி இந்த சுட்டியில் வசிக்க )

அது தோல்வியடையும் பட்சத்தில் செயற்கையான முறையிலே கருக்கட்டலை நடத்தும் பரிசோதனைக் குழாய்க் குழந்தைக்காக முயற்ச்சிக்கலாம்.

அடுத்ததாக சில பேரின் சுக்கிலப் பாயத்தில் விந்துகளே இல்லாமல் இருக்கலாம். இது  Azospermia  எனப்படும். இவர்களுக்கு கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை. இருந்தாலும் மிகவும் அரிதாக விந்துகள் முற்றும் முழுதாக இல்லாமல் போகுதல் சில வேறு நிவர்த்தி செய்யக் கூடிய நோய்களால் ஏற்படிருக்கலாம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நோய் சரி செய்யப்பட்டால் விந்து உற்பத்தி ஏற்பட்டு
கருத்தரித்தல் நடை பெறலாம். இது மிகவும் சொற்பமானவ்ர்களுக்கே சாத்தியம்.

விந்துகள் அறவே இல்லாதவர்கள் தம்பதியினர் வேறு ஒருவரின் விந்தணுக்களை
பெற்று IUI மூலம் கருப்பையினுள்  செலுத்தி கருத்தரிக்க முயற்ச்சிக்கலாம்.

இப்போது நிறைய தனியார் வைத்தியசாலைகளில்  விந்துகளை சேமிக்கும் வங்கிகள் உள்ளன.அங்கிருந்து விந்துகளை பெற்று IUI  மூலமோ /பரிசோதனைக் குழாய்க் குழந்தையாகவோ கருத்தரித்தலுக்கு முயற்ச்சிக்கலாம்.

குழந்தைப் பிறப்புகளிடையேயான இடைவெளி.


கேள்வி 
டாக்டர் ! எனக்கு ஒரு வயதிலே ஒரு குழந்தை இருக்கிறது. இப்போது மீண்டும் நான் கருத்தரிக்கலாமா?

பதில் 
ஒரு குழந்தை பிறந்து அடுத்த குழந்தை பிறப்பதற்கு இடையில் இரண்டுவருட கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
இருந்தாலும் இது கட்டாயமானதல்ல. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடம் வரை காத்திருக்காமல் விரைவாக அடுத்த ( ஒரு வருடமளவில்) குழந்தையைப் பெற்றெடுப்பது நல்லது. 
இவ்வாறு குறைந்த கால இடைவெளியில் குழந்தை பெற நினைப்பவர்கள் நன்கு போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவது அவசியம்.
கேள்வி கேட்ட சகோதரி இது    நீங்கள் உங்கள் வயது பொருளாதார வசதி என்பவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டிய விடயம். 
ஆனாலும் உங்க்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்ட படியால் விரும்பினால் நீங்கள் தாராளமாக கருத்தரிக்கலாம் என்பதே என் பதில்.   .

மாதவிடாய் காலத்து வலிகள் -பெண்கள் பக்கம்

................................................................................................................................................................
முந்திய தொடர்கள் ....

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


பூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)


.......................................................................................................................................................


மாதவிடாய் காலத்து வலிகள்

மாதவிடாய் காலத்தில் வயிற்றில் நோ ஏற்படுவது பெண்களில் பொதுவாகஇருக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஆங்கிலத்திலே DYSMENORRHEAஎனப்படும். இந்த வலியானது சில பெண்களுக்கு அன்றாட வேலைகளில்கவனம் செலுத்த முடியாதளவுக்கு பெரிய பிரச்சனையாக கூடஇருக்கலாம்.

அமெரிக்காவிலே நடத்தப்பட்ட ஒரு ஆய்விலே பாடசாலைப் பெண்களில்95 வீதமானோர் இந்த வலியினை அனுபவிப்பவர்களாக அறியப்பட்டது.



இந்த மாதவிடாய் கால வலியானது இரண்டாக பிரிக்கப்படலாம் .

பூப்படைந்த காலத்தில் இருந்தே ஏற்படுகிற வலி.

நான் மேலே சொன்ன விடயங்கள் இந்த வகையான வலியைப்பற்றியாகும். அதாவது பூப்படைந்த காலத்தில் இருந்தே உங்களுக்கு வலிஏற்படுமானால் , இந்த வலியினால் எந்த விதமான விளைவுகளும்ஏற்படாது. நீங்கள் அதைப்பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமும்இல்லை.

இருந்தாலும் இந்த வலியானது மாதவிடாய் ஆரம்பித்து முதல் 2தொடக்கம் 3 நாட்களுக்கே இருக்கும். அதற்கு அதிகமாகவும் வலிஇருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது உகந்தது.


வலி இல்லாமல் இருந்து பிற்காலத்தில் ஏற்படுகிற வலி.

அதாவது ஆரம்பத்தில் வலியில்லாத மாதவிடாய்களைத் தொடர்ந்துஇடையில் வலி ஆரம்பிக்குமானால் இந்த வலியானது வேறு சிலநோய்களால் ஏற்பட்டதாக இருக்கலாம். வைத்திய ஆலோசனை பெறுவதுஉகந்தது.

*************************************************************************************

மாதவிடாய் காலத்து வலி கடுமையாக இருப்பவர்கள் சிறிய ரகவலிநிவாரணிகளை வாங்கி பாவிக்கலாம்.
உதாரணத்திற்கு பரசிட்டமோல் (PARACETAMOL) இரண்டு மாத்திரைகள் 8மணிநேரத்திற்கு ஒருதடவை

அல்லது மேபினாமிக் அசிட்(MEFENAMIC ACID) எனப்படும் மாத்திரைஇரண்டு 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை.

Thursday, December 2, 2010

நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது



கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது.

அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது.






இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்...
திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்)

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவ முறை

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது 
உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.


இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது.


ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.


நச்சுக்கொடி பிரிதல் -ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது


Placenta  எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறும்.

ஆனால் சில வேளைகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னமே இதுகருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறலாம். இது ஆங்கிலத்திலே Placental abruption எனப்படும் .இது மிகவும் அபாயகரமானது. குழந்தை பிறப்பதற்கு முன்னமே நச்சுக் கொடி கருப்பையில் இருந்து பிரிவதால் குழந்தைக்குத் தேவையான ஒட்சிசன் உட்பட்ட முக்கிய பதார்த்தங்கள் கிடைக்காமல் போவதால் குழந்தை கருப்பையிலேயே இறந்து போய் விடலாம்.

                                           குழந்தை பிறப்பதற்கு முன்னமே பிரிந்த நச்சுக் கொடியில் இரத்தம் கட்டியாகி உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக குழந்தை பிறக்கச் செய்யப் பட முடியோ அவ்வளவு விரைவாக பிறக்கச் செய்யப்பட வேண்டும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சீசர் செய்ய வேண்டி வரலாம். ஆனாலும் சில வேளைகளில் கருப்பைக் வாயில் போதியளவு விரிவடைந்து இருந்தால் சீசர் செய்யாமல் ஆயுதங்கள்  ..பாவிப்பதன் மூலம் குழந்தை பிறக்கச்செய்யப்படலாம்.
.

பொதுவாக இது கர்ப்பம் தரித்து 5-6 மத காலத்திற்குப் பின்பு எப்போதும் ஏற்படலாம்.

அறிகுறிகள்...
1.தொடர்ச்சியான வயிற்று வலி (பிரசவ வலி விட்டு விட்டே ஏற்படும்)
விட்டு விட்டு ஏற்படாமல் தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்பட்டால் அது நச்சுக் கொடி பிரிந்ததால் இருக்கலாம்.

2.பிள்ளைத் துடிப்புக் குறைதல்

3.மயக்கம் வருவது போன்ற உணர்வு

4.சிலவேளைகளில் வயிற்று வலியுடன் சிறிதளவு  ரத்தம் யோனி(பிறப்புறுப்பு) வழியே வெளிப்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

இது எவருக்கு வேண்டுமானாலும் எந்தவிதமான காரணம் இல்லாமலும் ஏற்படலாம்.ஆனாலும் பலமாக வயிற்றிலே அடிபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.மேலும் கர்ப்பகால பிரசர் நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

 ஏற்கனவே சொன்னது போல இந்த நோய் கருப்பையின் உள்ளேயே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.அத்தோடு அதிக இரத்தம் வெளியேறுவது காரணமாக தாயின் உயிருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கு மருத்துவ முறை

குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் உடனடியாக பிறப்புத் தூண்டப்பட வேண்டும். சில வேளைகளில் சீசர் செய்ய வேண்டி வரலாம்.

ஆகவே கர்ப்பம் தரித்து .. மாத காலத்திற்குப் பின் உங்களுக்குத் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டால் எந்தவைதமான உணவுகளையும் வாய் வழியே உட்கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உtங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் நின்றபின் ரத்தம் போவது அபாயமானது !

பதில் 

வணக்கம் டாக்டர்.எனது அம்மாவின் வயது .. .இரண்டு வருடத்திற்கு முன்பே அவருக்கு இறுதியாக மாதவிடாய் ஏற்பட்டது.இப்போது 
மீண்டும் இரண்டு நாளாக ரத்தம் போகிறது. இது நார்மலா? 

பதில்

இல்லை இது நார்மல் இல்லை.
மாதவிடாய் நின்ற பிறகு மீண்டும் ரத்தம் போவது பல காரணங்களால்  ஏற்படலாம்.அந்த வகையில் முக்கியமானது கருப்பை 
சம்பந்தப்பட்ட புற்று நோய்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் இரத்தப் போக்கு ஏற்படும் பெண்கள் உடனடியாக 
வைத்தியரிடம் சென்று கருப்பை சம்பந்தப் பட்ட புற்று நோய்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள  வேண்டும். 
உடனடியாக உங்கள் தாயை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

தொப்புள்க்கொடி வெளியேற்றம் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது

தொப்புள் கோடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும்,குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும். ஆனால் சில வேளைகளில் இது குழாந்தை பிறப்பதற்கு முன்னமே வெளிவரலாம் இது cord prolapse  எனப்படுகிறது.

இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும்.

                         கருப்பைக்கு வெளியே தொப்புள் கொடி கீழிறங்குதல்             
இது ஏற்படும் பெண்களில் சிலவேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்படலாம் அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே இருக்கலாம்.அப்போது உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே 
எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். 


               வைத்தியசாலைக்கு செல்லும்போது நீங்கள் இருக்கவேண்டிய நிலை 
குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.சிலவேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம். அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்யவேண்டி வரலாம்.

உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் எந்தவிதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.

இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது.

ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் , உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். 

நச்சுக் கொடி கீழிறக்கம்-ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியது



பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.





                                                  நச்சுக்கொடி (placenta)


இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும்.

எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும்.

முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான 
நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை.







கருப்பை வாயில் வரை நச்சுக்கொடி(placenta) கீழிறங்கி இருக்கும் ஆபத்தான நிலை 

இந்த நோயின் அறிகுறி

கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம் தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் 
செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாத்
படியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே  ஆக  வேண்டும்..

இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட 
நாட்களுக்கு இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு முன்னமே சீசர் செய்யப்படும்.

சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்ல 
வேண்டியதுடன் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் சாதாரணமான
முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்....

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் ஏற்படலாம்.

சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே அவர்களுக்கு சீசர் செய்யப்படும். 

அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும் இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம்.

அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள வேண்டும்.

மிகவும் முக்கியமாக இந்த நோயாளிகள் குழந்தை பெறும் வரை முற்று முழுதாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும்..

Wednesday, December 1, 2010

கர்ப்பிணிகளுக்கு மலம் கறுப்பாக போவதேன்?

கேள்வி 

டாக்டர் ! நான் நான்கு மாதக் கர்ப்பிணி. எனக்கு சில நாட்களாக வயிற்றிலே ஏதோ செய்வது போன்ற உணர்வு இருக்கிறது. சரியாக சாப்பிட முடியவில்லை. மலம் போவது கஷ்டமாக இருக்கிறது. சில வேளைகளில் மலம் கறுப்பு நிறமாகப் போகிறது.ஒரு நண்பியிடம் கேட்ட போது கர்ப்ப காலத்தில் கறுப்பாக மலம் போவது சாதாரணமானது என்கிறாள்.அது உண்மையா?
அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்

நல்லது சகோதரி. கர்ப்ப காலத்தில் கருப்பாக மலம் போவதற்கும் கர்ப்பத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
ஆனாலும் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் இரும்புச் சத்துக் குளிசைகள் காரணமாக மலம் கறுப்பாக போகலாம்.
அத்தோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசிக்குறைவும், வயிற்றில் உள்ள அசௌகரியங்களும் கூட அந்த மாத்திரையால் ஏற்பட்டதாக இருக்கலாம்.அதனால் வைத்தியரிடம் சொல்லி வேறு விதமான மாத்திரைகளை பாவித்துப் பாருங்கள்.அதற்காக அச்சப் படத் தேவை இல்லை.

எயிட்ஸ் பற்றிய பொதுவான சில சந்தேகங்களும் பதில்களும்

இன்று எயிட்ஸ் தினம். அனேகமாக எயிட்ஸ் பற்றி எல்லோருக்கும் நிறைய விடயங்கள் தெரிந்திருக்கும். அதனால் நான் உங்களுக்கு  இருக்கக் கூடிய சில சந்தேகங்களை பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.

முத்தமிடுவதால் எயிட்ஸ் பரவுமா?

உமிழ் நீரில் வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் குறைவானாலும் 
உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போது ஒருவருக்கு வாயினுள்ளே காயங்களோ சிறிய ரத்தக் கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவலாம்.

வாய்வழிப் புரர்ச்சியால் எயிட் பரவலாமா? 

நிச்சயமாகப் பரவலம்.ஆனால் பரவுகின்ற வீதம் குறைவு.


எயிட்ஸ் உள்ளவர்களோடு சேர்ந்து விளையாடலாமா?

நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, ரத்தத் தொடர்பற்ற எந்த விதத்திலும் எயிட்ஸ் நோயாளியோடு நீங்கள் பழகலாம்.


எயிட்சுக்கு மருந்துகள் உள்ளனவா?

ஆம். இதை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வாழ்க்கைக் காலத்ததை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த மருந்துகள் உதவும்.


இரத்தம் ஏற்றுவதன் மூலம் எயிட்ஸ் பரவலாமா?

ஆம். ஆனாலும் அனைத்து வைத்திய சாலைகளிலும் இப்போது இரத்தம் பரிசோதிக்கப்பட்ட பின்பே ஏற்றப்படுவதால் அதற்காக அஞ்ச வேண்டியதில்லை.


ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவலாமா?

ஆம். இதன் போதுதான் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் அதிகம்.


தலைமுடி வெட்டும் போது எயிட்ஸ் தொ ற் றலாமா?

ஒரு பிளேட் பல பேருக்குப் பாவிக்கப்ப்படும்போது தவறுதலாக சிறிய வெட்டுகள் ஏற்பட்டால் எயிட்ஸ் தொற்றலாம்.
நீங்கள் தலைமுடி வெட்டும் போது உங்களுக்காக புது பிளேட் போடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


பச்சை குத்தும்போது எயிட்ஸ் தொ ற் றலாமா ?

ஆம். ஒரு உபகரணம் பல பேருக்கு பாவிக்கப்படுவதால் தொற்ற சந்தர்ப்பம் உள்ளது.


எயிட்ஸ் நோயாளி தாய்ப்பால் கொடுக்கலாமா?

இல்லை.

உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கேளுங்கள் !