Showing posts with label மாதவிடாய். Show all posts
Showing posts with label மாதவிடாய். Show all posts

Thursday, April 12, 2012

நிரந்தர மாதவிடாய் நிறுத்தம்




பெண்களிலே மாதவிடாய் ஏற்படுவது 48-52 வயதலவிலேயே நிரந்தரமாக நின்று போகும் . இது ஆங்கிலத்திலே மெனாபோஸ்(MENAPOUSE) எனப்படும். 
ஒரு பெண்ணிலே மாதவிடாய் நிரந்தரமாக நின்று விட்டது என்று கூறுவதற்கு அவளுக்கு தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் 
இருக்க வேண்டும். 
இவ்வாறு மாதவிடாய் நிரந்தரமாக நின்று போவதால் ஒரு பெண்ணின் உடம்பில் உள்ள சில ஹார்மோன்களின் அளவும் குறைந்து போகின்றது.
இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது.
அத்தோடு அவர்களின் என்புகளின் தடிப்புக் குறைந்து அவை பலமற்றதாக மாறக்கூடிய சந்தர்ப்பமும் அதிகரிக்கும். இவ்வாறு என்புகளின்
தடிப்புக் குறைதல் ஒஸ்டியோபோரோசிஸ்(OSTEOPOROSIS) எனப்படும். 
இந்த நிலையினால் பாதிக்கப்பட்ட என்புகள் இலகுவில் முறிந்து விடக்கூடியவை.அதாவது அவர்கள் சாதாரணமாக தடுக்கி விழும் போதே இந்த என்புகள் முறிவடையலாம்.

மேலே சொன்னவை மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு நீண்ட கால அடிப்படையில் ஏற்படுகின்ற பாதிப்புக்களாகும்.

இது தவீர மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலப்பகுதியில் பல அறிகுறிகள் ஏற்பட்டு பல அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

அவையாவன ,
  1. ஹாட் பிளாஷ்(HOT FLUSH) எனப்படும் உடம்பு சூடான உணர்வு .
  2. மனக்குழப்பங்கள்
  3. எரிச்சலடையும் தன்மை
  4. தூக்கமின்மை 
  5. பாலியல் உறவில் நாட்டம் குறைதல் போன்றவை .

இவ்வாறான அறிகுறிகள் காரணமாக அதிகரித்த அசௌகரியங்களை அனுபவிப்பவர்கள் வைத்தியரை நாடி உடம்பில் குறைவடைந்த ஹார்மோன்களை பாவிப்பதன் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். 

Tuesday, July 26, 2011

மாதவிடாய் பிற்போகுதல்

வணக்கம் மேடம்
    நான் திருமணமாகாத கல்லூரி மாணவி. நான் கடந்த எட்டு மாதங்களுக்கு
முன் ஒரு விபத்தில் சிக்கி எனது காலில் பலத்த அடி காரணமாக சதை
பிய்த்துவிட்டது நிறய ரத்தம் விபத்தில் சேதமாகிவிட்டது காலில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதோடு பெல்விஸ் எனப்படும் காலும்
இடுப்பு எலும்பும் இணையுமிடத்தில் எலும்பு முறிவு அது பெட் ரெஸ்டில்
சரியாகிவிட்டது. கடந்த 3 மாதங்களூக் முன்பு வரை மாதவிடாய் சரியாக வந்து
கொண்டிருந்தது ஆனால் கடந்த 3 மாதமாக மாதவிடாய் ஆகவில்லை இதே போல்
எப்பவாவது ஒரு முறை பிரச்சணை இருக்கும் 2மாதம் மாதவிடாய் ஆகாமல் இருந்து
மறுபடி ஆவேண் ஆணால் இந்த முறை 3 மாதங்களாகியும் ஆகவில்லை. என்ன காரணம்
என்று கொஞ்சம் விளக்குங்கள் . நான் எந்த தவறும் செய்யவில்லை . கடந்த ஆறு
மாதங்களாக நன்றாக நடக்க முடியாத நிலை விபத்தின் காரணமாக தற்பொது நன்றாக
நடக்கிரேண் . கொஞ்சம் எடை கூடியுள்ளது தயவுசெய்து என்ன செய்யட்டும் என்று
என் MAIL ID கு தமிழில் பதில் அளியுங்கள்.


பதில்

நல்லது சகோதரி. 
மாதவிடாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் பிந்திப்போவதற்கு 
பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம்.
அதிலே முக்கியமான ஒரு காரணி மன உளைச்சல் ஏற்படுவதாகும்.கடந்த மூன்று 
மாத காலமாக உடல் சுகவீனமுற்று இருந்த உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் காரணமாக மாதவிடாய் பிற்போகி இருக்கலாம்.
இது ஒரு சாதாரண நிகழ்வு உங்கள் உடல் நிலையும் மன நிலையும் பழைய நிலைக்குத் திரும்பும் போது மாதவிடாயும் சீராகும்.

ஆனாலும் உங்க்கள் உடல் நிறை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளதோடு முன்பும் 
ரெண்டு மாதமளவில் மாதவிடாய் பிந்திப் போவதாக கூறியுள்ளதால் உங்களுக்கு 
சூலக நீர்க்கட்டிகள் பிரச்சினை (PCOD)இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.


நீங்கள் ஒரு பெண் நோயியல் மகப்பேற்று நிபுணரை சந்திப்பது நல்லது.

Tuesday, November 30, 2010

மாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்

....................................................................................................................................................................
முந்திய தொடர்கள் ....

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


பூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)

....................................................................................................................................................................
Premenrual syndrom(PMS) எனப்படுவது பெண்களை வாட்டி எடுக்கும் மாதவிடாயோடு சம்பந்தப்பட ஒரு நோயாகும்.இந்த நோயின் இயல்பானது ஒவ்வொருமுறை மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு வார காலத்தில் ஆரம்பித்து மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மறைந்துவிடும்.

அறிகுறிகள்

  1. அதிகரித்த முகப்பரு
  2. மலச்சிக்கல்(CONSTIPATION)
  3. மன உளைச்சல்(ANXIETY)
  4. மனத்தாழ்வு(DEPRESSION)
  5. நாரி நோ
  6. வயிறு ஊதிய உணர்வு
  7. வயிற்றுக்குள் ஏதோ செய்வது போன்ற உணர்வு(BLOATING)
  8. அதிகமான களைப்பு
  9. இதயம் அதிகமாக துடிக்கும் உணர்வு(PALPITATION)
  10. தலையிடி
  11. மூட்டு நோ
  12. உடலுறவில் நாட்டம் குறைதல்
  13. தூக்கமின்மை
  14. வெளியில் கவனம் செலுத்தமுடியாமை
  15. மார்பக வலி
  16. மார்பகம் வீங்கிய உணர்வு
  17. கைகால் வீங்கிய உணர்வு
  18. உடல் நிறை அதிகரித்தல்
  19. பசிக்குறைவு/சில உணவுகளில் மட்டும் அதிக நாட்டம் 

மேலே சொன்ன அறிகுறிகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன் தொடங்கி மாதவிடாய் ஆரம்பிப்பதோடு மறைவதோடு அவை அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலேயே அவை Premenstrual syndrome எனப்படும்.

இந்த நிலையை பூரணமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆனாலும் குழந்தை பிறந்தவுடன் இதன் தாக்கம் குறைவதாக சொல்கிறார்கள்.

இந்தப் பாதிப்பு ஏற்படும் காலத்தில் வைத்தியரின் அறிவுரை இல்லாமலேயே பெறக்கூடிய சில வலி நிவாரணிகளை நீங்கள் பாவிக்கலாம்.
அவை- பரசிட்டமோல், ப்புருபான்(Ibrufan),மேபினாமிக் அசிட்(mefenamic acid) போன்ற மாத்திரைகள்.

அதுதவிர கீழே உள்ள நடவடிக்கைகள் மூலமும் அதன் பாதிப்புக்களைக் குறைக்கலாம்.
கடலை தானிய உணவுகளை அதிகாமக் உண்ணுதல்
கொழுப்பு கலந்த உணவுகளைக் குறைத்தல்(முக்கியமாக எண்ணெய்)
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணுதல்
மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
கோப்பி , மது அருந்துதலை தவீர்த்தல்
உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்
போதியளவு தூங்குதல்
மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.
(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடரும் ....

.பி.கு-
பெண்களே இது முற்று முழுதாக உங்களுக்கான தொடர்...
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் முன் வையுங்கள் .

Friday, August 13, 2010

மாதவிடாய் பற்றிய ஒரு சந்தேகம்

கேள்வி 

எனது மகளுக்கு மாதாமாதம் மாதவிடாய் ஏற்படாமல் .. அல்லது .. நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது. நாங்கள் வைத்தியரிடம் செல்ல வேண்டுமா என்று தயவு செய்து விளக்கவும்?

பதில் 

மாதவிடாய் என்பது சரியாக மாதத்திற்கு ஒருதடவை ஏற்படுகின்ற நிகழ்வு என்றே எல்லோரும் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். 
உண்மையில் மாதவிடாய் சரியாக முப்பது நாளைக்கு ஒருதடவை ஏற்படுகின்ற நிகழ்வு அல்ல.

அநேகமான பெண்களிலே இது சரியாக மாதம் ஒருமுறை( 28 நாளைக்கு ஒருதடவை )ஏற்பட்டாலும் 21 நாளில் இருந்து 35 நாளைக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படுகின்ற மாதவிடாயும் சாதாரனமானதாகும்.

அதாவது உங்களுக்கு மாதவிடாய்  21. தொடக்கம் 35 நாட்கள் என்ற இடைவெளியில் சீராக நடைபெறுமானால அது சாதாரனமாதாகும்.

அதற்கு வேறுபட்ட அதாவது 21 நாளைக்கு குறைவானதாகவோ அல்லது 35 நாளைக்கு மேற்பட்டதாகவோ  மாதவிடாய் ஏற்படும் பட்சத்தில் வைத்தியரின் உதவியை நாடுவது அவசியமாகும் .

Wednesday, March 17, 2010

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?

மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு  கொள்வது ஒரு தகாத செயலா?
 

இல்லை 
.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய்  காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.

மேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.

மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்?
மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.

மேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.

அதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்.





Tuesday, December 15, 2009

மாதவிடாய் காலத்து வலிகள்

மாதவிடாய் காலத்தில் வயிற்றில் நோ ஏற்படுவது பெண்களில் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஆங்கிலத்திலே DYSMENORRHEA எனப்படும். இந்த வலியானது சில பெண்களுக்கு அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு பெரிய பிரச்சனையாக கூட இருக்கலாம்.

அமெரிக்காவிலே நடத்தப்பட்ட ஒரு ஆய்விலே பாடசாலைப் பெண்களில் 95 வீதமானோர் இந்த வலியினை அனுபவிப்பவர்களாக அறியப்பட்டது.



இந்த மாதவிடாய் கால வலியானது இரண்டாக பிரிக்கப்படலாம் .

பூப்படைந்த காலத்தில் இருந்தே ஏற்படுகிற வலி.

நான் மேலே சொன்ன விடயங்கள் இந்த வகையான வலியைப் பற்றியாகும். அதாவது பூப்படைந்த காலத்தில் இருந்தே உங்களுக்கு வலி ஏற்படுமானால் , இந்த வலியினால் எந்த விதமான விளைவுகளும் ஏற்படாது. நீங்கள் அதைப்பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இருந்தாலும் இந்த வலியானது மாதவிடாய் ஆரம்பித்து முதல் 2 தொடக்கம் 3 நாட்களுக்கே இருக்கும். அதற்கு அதிகமாகவும் வலி இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது உகந்தது.


வலி இல்லாமல் இருந்து பிற்காலத்தில் ஏற்படுகிற வலி.

அதாவது ஆரம்பத்தில் வலியில்லாத மாதவிடாய்களைத் தொடர்ந்து இடையில் வலி ஆரம்பிக்குமானால் இந்த வலியானது வேறு சில நோய்களால் ஏற்பட்டதாக இருக்கலாம். வைத்திய ஆலோசனை பெறுவது உகந்தது.

*************************************************************************************

மாதவிடாய் காலத்து வலி கடுமையாக இருப்பவர்கள் சிறிய ரக வலிநிவாரணிகளை வாங்கி பாவிக்கலாம்.
உதாரணத்திற்கு பரசிட்டமோல் (PARACETAMOL) இரண்டு மாத்திரைகள் 8 மணிநேரத்திற்கு ஒருதடவை

அல்லது மேபினாமிக் அசிட்(MEFENAMIC ACID) எனப்படும் மாத்திரை இரண்டு 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை.


இந்த இடுகை பயனுள்ள இடுகை என்று நீங்கள் நினைத்தால் மறக்காமல் வாக்களித்து மேலே சென்று வாக்களித்து மற்றவர்களுக்கும் போய்ச் சேரச் செய்யுங்கள் அப்படி இல்லாவிட்டால் பிழைச் சுட்டிக் காட்டுங்ககள் பயனுள்ள இடுகைகளை எழுதுவதற்கு வழிகாட்டியாக அது அமையும் .