Showing posts with label கர்ப்பத்தடை. Show all posts
Showing posts with label கர்ப்பத்தடை. Show all posts

Sunday, May 30, 2010

விறைப்புத் தன்மை / கர்ப்பத்தடை சில சந்தேகங்கள்

கேள்வி

எனக்கு 26 வயது ஆகிறது .1  வருடத்திற்கு முன்பு எனக்கு அம்மை போட்டு இருந்தது .  அம்மைக்கு பின் 1  மாதம் கழித்து நான் விறைப்பு தன்மை குறைவாக இருப்பதாக உணர்ந்தேன் . அந்த சமயத்தில் காலை விறைப்பும் சில சமயங்களில் விறைப்பு தன்மை நிறைவாகவும் இருப்பதாக  உணர்ந்தேன் .நான் விறைப்பு தன்மை குறைவதாக உணர்ந்ததில் இருந்து சில சமயங்களில் ஏற்பட்ட நிறைவான விறைப்பு தன்மையும் 2  மாதங்களுக்கு பின்பு உணரவில்லை . காலை விறைப்பும் குறைவதை உணர்ந்தேன்  .விறைப்பு தன்மை குறைவாக உணர்ந்த ஆரம்ப நாட்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு உடல் அசதி , கவனமின்மை , கையை மடக்கி படுத்தால் அடிக்கடி  கை மரத்து போதல் போன்ற பிரச்சினைகள்  இருந்தது  .கடந்த ஜனவரியில்  சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன் . இப்பொழுது அதை விட சில மாதங்களுக்கு முன்பு இருந்த விறைப்பு தன்மையை விட தற்சமயம் குறைவாக உள்ளதாக உணர்கிறேன் . காலை விறைப்பும் குறைவாக உள்ளது . விறைப்பு ஏற்படும் சமயங்களில் விறைப்பாக இருந்தும்  பிறப்பு உறுப்பை தொட்டால் தான் உணர முடிகிறது.. விறைப்பு கிட்டத்தட்ட 90 டிகிரி அல்லது அதற்கு சற்று குறைவாக உள்ளது . 
ஹார்மோன் அளவு , ரத்த அழுத்தம் , சர்க்கரை ,உடல் எடை ,கொழுப்பு எல்லாம்  கட்டுப்பாட்டில் உள்ளது  .. கை மரத்து போதல் இன்று  வரை உள்ளது . இது மனப் பிரச்சினையா அல்லது உடல் சார்ந்த பிரச்சினையா என்று அறிய விரும்புகிறேன் .

உங்கள் கருத்தை நான் எதிர்பார்கிறேன் . நான் என்ன செய்ய வேண்டும் என்று. //


பதில்

அம்மை நோய் காரணமாகவோ அல்லது சிக்குன்குன்யா நோய் காரணமாகவோ விறைப்புத்தன்மை நேரிடையாக பாதிக்கப்பட சந்தர்ப்பம் இல்லை.
ஆனாலும் இரண்டுமே வைரசினால் ஏற்படும் நோயாகும் , இந்த வைரஸ் நோய்கள் குணமானாலும் உடம்பிலே ஒரு அசௌகரியமான அசதித் தன்மை நீண்ட நாட்களுக்கு இருக்கலாம். இது post-viral fatigue எனப்படும். இங்கே
fatigue எனப்படுவது அந்த அசதித் தன்மையைக் குறிக்கும். இந்த அசதித் தன்மை சாதாரண தடிமனின் பின்பு கூட சில நாட்களுக்கு தொடர்ந்து இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இந்த அசதித்தன்மை காரணமாக பாலியல் ரீதியான ஆர்வம் சற்றுக் குறைந்து காணப்படலாம். ஆனாலும் இது நிரந்தரமானது அல்ல சில மாதங்களில் இந்த நிலைமை முற்றிலும் நீங்கிவிடும். அதுவரை நீங்கள் நன்று போஷாக்கான உணவுகளை உண்டு , போதிய உடற்பயிற்ச்சிகளை மேற்கொண்டு , உங்கள் வேளையில் பூரணமாக ஈடுபடுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லைநண்பரே! 


..................................................................................................................................................................
கேள்வி 


டாக்டர் உங்களின் வெளிப்படையான ஆலோசனைகளுக்கு வணக்கம் கலந்த நன்றிகள்..

நான் வெளிநாட்டில் கணிணித்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.. வருஷம் ஒரு மாதம் விடுமுறை உண்டு.எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தைகளும் உண்டு.. எங்களுக்கு இப்பொழது பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஆணுறை அணிந்து உடலுறவு கொள்வதில் திருப்தியில்லை,என் மனைவிக்கோ கருத்தடை மாத்திரை உட்கொண்டால் உடல் குண்டாகிவிடும் என்று பயப்படுகிறாள்.. ஆண்களுக்கான பக்கவிளைவுகளை உண்டாக்காத கருத்தடை  மாத்திரைகள் உண்டா? 
இதற்கு மாற்றுவழி உண்டா? டாக்டர்.


இப்படிக்கு 
அந்தரங்கம் கருதி பெயரை வெளியிட விரும்பாதவன் .

 நன்றி..//
பதில்


நன்றி உங்கள் பிரச்சினை நியாயமானதுதான். கருத்தடை மாத்திரை மூலம் உடல் குண்டாகும் என்பது உண்மைதான். சில ஆண்களுக்கு ஆணுறையால் திருப்தி இல்லை என்பதும் உண்மைதான்.
மாற்று வழியாக ஆண்கள் பாவிக்கக் கூடிய கருத்தடை முறைகள பற்றி கேட்டு இருந்தீர்கள். கொண்டம் தவிர ஆண்கள் பாவிக்க கூடிய கருத்தடை முறைகளாவன withdrawal   முறை எனப்படும் விந்து வெளியேறும் தருணத்தில் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியே செலுத்தும் முறை.
அடுத்ததாக ஆண்கள் செய்யக் கூடிய கருத்தடை சத்திர சிகிச்சை.
முதலாவது நான் கூறிய முறை நம்பகமற்றது, இரண்டாவது கூறிய கருத்தடை சத்திர சிகிச்சை முறை நிரந்தரமானது . உங்களுக்கு ஒரே ஒரு குழந்தைதான் உள்ள காரணத்தால் சத்திர சிகிச்சை முறை உகந்ததல்ல.


ஆனாலும் இப்போது நிறைய திருப்தி அளிக்கக் கூடிய கொண்டம்கள் கிடைக்கின்றன அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.


அல்லது உங்கள் மனைவி கருத்தடை முறையாக லூப் எனப்படும் கருவியைப் பாவித்துக் கொள்ள முடியும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகளை விட குறைவானவை. உடற்பருமனும் அதிகரிப்பதில்லை.மேலும் இது உடல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதும் இல்லை. ஒரு வைத்தியரைச் சந்தித்து உங்கள்மனைவிக்கு லூப் பாவிப்பதே உங்களுக்கு சிறந்த முறை என்கிறேன். 

 உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். பாலியல் தவிர்ந்த மற்றைய சந்தேகங்களையும் எதிர் பார்க்கிறேன்.


Saturday, April 10, 2010

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)

முன்னைய இந்தப் பதிவிலே பெண்களுக்கு எப்படி கருத்தடை செய்யப்படுகிறது என்று விளக்கி இருந்தேன். பெண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது அந்தப் பெண்ணை முற்று முழுதாக மயக்கி , ஒரு சத்திர சிகிச்சை கூடத்திலே செய்யப்படும் ஒரு சத்திர சிகிச்சையாகும். இதனால் அந்தப் பெண்ணுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
உதாரணமாக மயக்க மருந்தினால் ஏற்படும் பாதிப்பு , வயிற்றை வெட்டி செய்யும் சத்திர சிகிச்சை என்பதால் தொற்றுக்கள் , இரத்தப் போக்குகள் என்பவை ஏற்படவும் சாத்தியம் உள்ளது.

ஆனால் இந்த பாதிப்புகள் மிகவும் குறைந்த முறையில் ஆண்களிலே மிகவும் இலகுவாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப் படலாம்.

ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது Vasectomy எனப்படுகிறது.

பெண்களிலே நடைபெறும் சத்திர சிகிச்சையில் முட்டை கருப்பை நோக்கி நகரும் பலோப்பியன்(fallopian) குழாய் வெட்டித் தைக்கப்படும்.
ஆண்களிலே கூட அதற்கு நிகராக விந்துகள் பயணிக்கும் குழாயான Vas deferens எனப்படும் குழாய் வெட்டித்தைக்கப்படும்.

பெண்களிலே பலோப்பியன் குழாய் வயிற்றின் உள்ளே இருப்பதால் வயிற்றை வெட்டியே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும்.

ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்ப்குதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.

இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.

இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.

வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.

இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm)  காயமே.

இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும்   போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.


ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள். 
நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.


      
    எவ்வளவு இலகுவாக இந்த சத்திர சிகிச்சை நடைபெறுகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள் !