Saturday, December 18, 2010

சளியோடு இரத்தம் வெளியேறுதல்

இருமும் போது சளியுடன் இரத்தம் வெளியேறுதல் பல நோய்களால் ஏற்படலாம்.
சளியுடன் ரைத்தம் வெளியேறுதல் மருத்துவ ரீதியாக ஹீமொப்டிசிஸ் (Hemoptysis) எனப்படும்.

அவ்வாறான நோய்கள் 
  1. நியுமோனியா மற்றும் சுவாசப்பைக் கிருமித் தொற்றுக்கள்
  2. காசநோய் (T.B)
  3. சுவாசப்பை புற்று நோய்கள் 

இவை தவீர இன்னும் ஏராளமான அரிதான நோய்கள் இருக்கின்றன. 

ஆனாலும் சளியுடன் ரத்தம் வெளியேறும் ஒருவருக்கு மேலே சொன்ன நோய்களில் எதுவும் இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட வேண்டும். ஆகவே உங்களுக்கு ஒருதடவையேனும் சிறிதளவான அளவு இரத்தம் சளியோடு வெளியேறினால்  கூட உடனடியாக வைத்தியரிடம் செல்ல வேண்டியது அவசியமாகும்.

Thursday, December 16, 2010

ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.


உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 
  1. அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
  2. சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
  3. நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
  4. பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )


இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

  1. தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
  2. குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
  3. துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
  4. எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
  5. தவழுதல் -------- 8மாதம்
  6. எழுந்து நிற்றல் -------- 9மாதம்
  7. பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
  8. துணையின்றி நடத்தல் ---------12மாதம்
  9. ஓடுதல் -------- 15மாதம்
  10. ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
  11. மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம


மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..

அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்

  • தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
  • குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
  • அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல் 

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை

  • ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல் 
  • நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
  • நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தமானவை

  • இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல் 
  • தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல் 
  • சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
  • விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல் 
  • தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை

  • சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல் 
  • மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்

பேச்சு


  • நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல் 
  • தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
  • கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தப்பட்டது

  • சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
  • சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
  • துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை

  • மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல் 
  • இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
  • தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்


பேச்சு

  • அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
  • வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
  • மற்றவர்களோடு பேச முயற்சித்தல் 
  • வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல் 
  • பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்

Wednesday, December 8, 2010

அப்பன்டிசைட்டிஸ்(Appendicitis)

அப்பன்டிக்ஸ்(Appendix) எனப்படுவது நமது பெருங்குடலோடு சேர்ந்திருக்கும் ஒரு சிறிய உறுப்பாகும்.இது நமது உடலிலே எந்தவிதமான தொழிலையும் செய்வதில்லை.இது நமக்குத் தேவை இல்லாத ஒரு உறுப்பாகும். சிலவேளைகளில் இதிலே கிருமித் தொற்று ஏற்பட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.இதிலே ஏற்படும் கிருமித் தொற்றினால் அலர்ச்சி ஏற்படுவது அப்பன்டிசைட்டிஸ்(Appendicitis) எனப்படும்.

                                                 தொற்று ஏற்பட்ட உறுப்பு(அப்பன்டிசைட்டிஸ் )

இதன் அறிகுறிகள்
  1. மெலிதான காய்ச்சல்
  2. வாந்தி 
  3. பசிக்குறைவு 
  4. வயிற்று வலி 
இதனால் ஏற்படும் வயிற்று வலி ஆரம்பத்திலே தொப்புளைச் சுற்றி ஏற்பட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலது பக்க அடி வயிற்றை நோக்கி நகரலாம். சில பேரில் இந்த மாற்றம் சரியாக விளங்காமல் நேரடியாக வலது பக்க அடிவயிற்று வழியே ஏற்படலாம்.

இந்த நோயை வைத்தியர் நோயாளியை பரிசோதிப்பதன் மூலம் ஓரளவுக்கு உறுதிப் படுத்திக் கொள்வார். .இதை உறுதிப் படுத்துவதற்கான வேறு விசேஷமான பரிசோதனைகள் தேவை இல்லை.

குறிப்பாக வலது பக்க அடி வயிற்றிலே கையினால் அழுத்தும் போது ஏற்படும் வழியை விடஅழுத்திய கையை சடுதியாக எடுக்கும் போது வலி அதிகரிக்கும்.இது Rebound tenderness  எனப்படும்.இவ்வாறான 
வலி ஏற்பட்டால் அது அப்பன்டிசைட்டிஸ் ஆக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

வைத்தியர் ஏற்பட்டிருப்பது இந்த நோய்தான் என்று நினைத்தால் சத்திர சிகிச்சை செய்து அந்த உறுப்பு நீக்கப்படும்.

சில பேரிலே தொற்று ஏற்பட்டு அந்த உறுப்பைச் சுற்றி சீழ் கட்டிக் -கொள்ளும்.அவ்வாறானவர்களில்சத்திரசிகிச்சை செய்வது ஆபத்தானது.அவர்களுக்கு அண்டி பயட்டிக்ஸ்(Antibiotics) கொடுக்கப்பட்டு சில 
வாரங்களின் பின் சத்திர சிகிச்சை செய்யப்படும். 

Tuesday, December 7, 2010

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை அல்லது செங்கண்மாரி எனப்படுவது ஒரு வகை வைரசினால் ஏற்படுகின்றது.இது எமது கல்லீரலைத்(Liver) தாக்கி அதிலே அலர்ச்சியைஏற்படுத்தும்  ஒரு நோயாகும்.

இது ஹெப்பட்டைட்டிஸ் A,B,C,D,E  என பல்வேறு வகையான வைரசுக்களால் ஏற்படலாம்.

ஒவ்வொரு வைரசின் தாக்கமும் நோய் நிலைமையும் வேறு வேறானவை.

பொதுவாக ஏற்படுகின்ற நோயானது Hepatitis A (ஹெப்பட்டைட்டிஸ் A ) எனப்படும் வைரசினால் ஏற்படுகிறது.

இது உணவின் மூலமே பரவும்.

மாறாக ஹெப்பட்டைட்டிஸ்B வைரஸ் உடலுறவு மூலமும் குருதி பரிமாற்றம் மூலமும் பரவும்.

ஹெப்பட்டைட்டிஸ்A வைரஸ் பொதுவாக சிறுவர்களை அதிகமாகத் தாக்கும் அதேவேளை எல்லா வயதினரையும் இது தாக்கலாம்.


இதன் (Hepatitis A) அறிகுறிகள்

  1. காய்ச்சல்
  2. உடம்பு நோ
  3. வயிற்றின் மேல்ப் பகுதியில் வலி
  4. வாந்தி
  5. கண்கள் ,உள்ளங்கை போன்றவை மஞ்சள் நிறமாக மாறுதல்

இந்த நோய் தானாக சுகமாகி விடும்.ஆனாலும் வாந்தி,காய்ச்சல், உடம்பு வலி என்பவற்றை நீக்க சில மாத்திரைகள் தேவைப்படும்.

ஹெப்பட்டைடிஸ் A ஏற்பட்ட ஒருவருக்கு சுகமான பின் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
மேலும் மீண்டும் ஒருமுறை இந்த நோய் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பம் இல்லை.

அதாவது ஹெப்பட்டைடிஸ் A வைரஸ் தாக்கம் வாழ்வில் ஒருமுறைதான் ஏற்படும். 

சிறுநீரக செயல் இழப்பு 2

சிறுநீரக செயல் இழப்பு சடுதியானதாக(acute renal failure) இருக்கலாம் அல்லது நாட்பட்ட செயல் இழப்பாக(chronic renal failure0  இருக்கலாம்.
சடுதியான செயல் இழப்பு பற்றி இந்த சுட்டியில் பார்த்தோம்.
இன்று நாட்பட்ட செயல் இழப்பு பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பு(chronic renal failure).

சில நீண்ட கால நோய்கள் சிறுநீரகத்தை பாதித்து நிரந்தரமான முறையில் அதன் தொழிற்பாட்டைக் குறைத்தல் நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பு எனப்படுகிறது. முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இதிலே ஏற்படும் பாதிப்பானது நிரந்தரமானது மாறாக சடுதியான சிறுநீரக செயல் இழப்பானது தற்காலிகமானது.

நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகள்

உயர் குருதிமுக்கம்
நீரழிவு 

நீரழிவு மற்றும் உயர் குரிதியமுக்கம் என்பவை சரியாக கட்டுப் பாட்டுக்குள் வைக்கப் படாவிட்டால் நாளடைவில் 
அவை சிறுநீரகத்தைப் பாதிக்கும். இவையே சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தும் மிகவும் பொதுவான காரணிகளாகும்.

இவை தவீர வேறு சில நோய்களும் சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தலாம்.அவை அரிதாகவே ஏற்படுகின்ற நோய்களாகும்.

அவையாவன
சிறுநீரகத்தில் நீர்க்கட்டி தேங்கும் பரம்பரை நோய்(polycystic kidney disease)
சிறுநீரக கலங்களின் அலர்ச்சி(chronic glomerular nephritis)
சிறுநீரகப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பு போன்றவை

நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பிலும் சடுதியான செயல் இழப்பினால் ஏற்பட்ட அனைத்து விதமான பாதிப்புக்களும் ஏற்படலாம்.
அவையாவன
குருதியில் பொட்டாசியம் அதிகரித்து இதயம் பாதிக்கப் படல்
குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் சேருதல்
குருதி அமிலமாகுதல்(acidosis)
உடம்பில் அதிகமான நீர் தேங்குதல்

இவை தவீர நாட்பட்ட செயல் இழப்பினால் எலும்புகளிலே கல்சியம் குறைந்து எலும்பு வலி ஏற்படலாம்
உடம்பிலே விட்டமின் D குறையும்
குருதியில் செங்குருதிக் கலங்கள் குறைந்து குருதிச் சோகை ஏற்படலாம்.

மேற்சொன்ன பாதிப்புக்கள் மூலமாக ஏற்படக் கூடிய சில அறிகுறிகள்

பசிக் குறைவு
உடம்பு வலி
உடம்பின் நிறம் சற்றுக் கருமையாகுதல்
உடலுறவில் நாட்டம் குறைதல்
குருதிச் சோகையினால் அதிகமான களைப்பு
கைகால் ,வயிறு மற்றும் முகம் வீங்குதல் போன்றவை 

இந்த நோய் ஏற்பட்டவர்கள் நோயின் தீவிரம் அதிகரிப்பதைத் தவீர்ப்பதற்கு நீரழிவு மற்றும் உயர் குருதியமுக்கத்தை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.

வைத்தியரின் ஆலோசனைப் படி சில உணவுக் கட்டுப் பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

குருதிக் கலங்களை உற்பத்தி செய்யும் எரித்திராப் போயிட்டின் (erythropoeitin)எனும் கார்மோனை(Hormon) ஊசி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விட்டமின் மாத்திரைகளையும் ,கல்சியம் மாத்திரைகளையும் எடுப்பதன் மூலம் எலும்புப் பாதிப்பை தவீர்க்கலாம்.

குருதியிலே நச்சுப் பதார்த்தங்கள் அதிகரிக்கும் போது டயாலிசிஸ் மூலம் குருதி சுத்தம் செய்யப்படலாம். எத்தனை நாளைக்கு ஒருதடவை டயாலிசிஸ் செய்யப் பட வேண்டும் என்பதை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 
 வைத்தியர் தீர்மானிப்பார்

இறுதியாக சிறுநீரக மாற்றீடு தீர்வாக அமையும். ஆனாலும் நீரழிவு நோயினால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்றீடு செய்யப் படுவதில்லை..

Monday, December 6, 2010

திருமணம் முடிக்கப் போகும் /கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் அறிய வேண்டியது

போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லதுஅங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம் .

இதைத் தடுப்பது மிகவும் இலகு .கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த மாத்திரையை வைத்தியரின் துண்டு இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் கம்மி. கருத்தரித்த பின் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு இந்த மாத்திரை உட்கொள்ளப்பட வேண்டும்.கருத்தரித்து மூன்று மாதத்திற்கு பின் இந்த மாத்திரையை எடுக்க வேண்டியதில்லை.

ஆகவே திருமணம் முடிக்கப்போகும் பெண்களே திருமணம் முடித்தவுடன் குழந்தைக்காக முயற்சி செய்யப் போகிறீர்கள் என்றால் திருமணத்திற்கு முன்பே போலிக் அசிட் மாத்திரையை பாவியுங்கள்.

சிறுநீரக செயல் இழப்பு

சிறுநீரகம் (Kidney)நமது உயிர்வாழ்க்கைகுத் தேவையான முக்கியமான உறுப்பாகும்.

இதன் தொழில்கள் ,

1.குருதியில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல்
2.உடலில் நீரின் அளவை சரியான அளவில் வைத்திருத்தல்
3.உடலில் சோடியம் பொற்றாசியம் உட்பட்ட பல மூலகங்களை கட்டுப் பாட்டில் வைத்திருத்தல்
4.குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களின் உற்பத்தியை தூண்டும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்
5.குருதி அமுக்கத்தை கட்டுப் படுத்தல்

இவ்வாறு பல முக்கியமான செயற்பாடுகளை செய்யும் சிறுநீரகம் பல காரணங்களால் செயல் இழந்து போகலாம். இந்த செயல் இழப்பானது சடுதியானதாக (Acute renal failure) இருக்கலாம் அல்லது நாட்பட்டதாக(Chronic renal failure) இருக்கலாம்.

சடுதியாக ஏற்படும் சிறுநீரக செயல் இழப்பு(acute renal failure)

இதில் திடீரென சிறுநீரகத்தின் செயற்பாடு குறையும்.

இதை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் 

1.சடுதியாக குருதியின் அளவு குறைதல் -குருதிப் பெருக்குக் காரணமாக
2.உடலில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுதல்-வயிற்றோட்டம் வாந்தி பேதி  போன்றவை மூலம்
3.சிறுநீரகத்திற்கு இரத்தம் கொண்டு போகும் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கள்
4.உடலில் பரவலான கிருமித் தொற்று(sepsis)
5.சிலவகை மருந்துகள் - பொதுவாக வலிநிவாரநிகளாக கொடுக்கப்படும்
                                                 NSAID எனப்படும் வகை மாத்திரைகள் .
6.சிலவகை நஞ்சுகளால் ஏற்படலாம் (நஞ்சு அருந்தியவர்களில்)
7.சிலவகை பாம்புக் கடி
8.எலிக்காய்ச்சல்

இப்படி ஏராளமான காரணங்களால் சிறுநீரகத்தின் செயற்பாடு சடுதியாக குறையலாம்.

இவ்வாறு சடுதியாக குறையும் சிறுநீரகச் செயற்பாடு அநேகமான சந்தர்ப்பங்களில் தற்காலிகமாதுதான்(மாறாக நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பு நிரந்தரமானது)

சடுதியான சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்திய காரணி சரியாக்கப் பட்டால் மீண்டும் சிறுநீரகம் தன் செயற்பாட்டை பெற்று சாதாரண நிலையை அடையலாம்.

இதனால் ஏற்படும் அறிகுறிகளை ஒருவர் அறிவதற்கு முன்னமே வைத்தியரினால் அது அடையாளம்கண்டு பிடிக்கப்பட்டு விடும்.

ஆனாலும அந்த நேரத்தில் சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளின் அறிகுறிகள் இருக்கும்.உதாரணமாக எலிக்காய்ச்சல், பாம்புக்கடி அதிகமான வாந்தி ,குருதிப் பெருக்கு இவ்வாறான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கும்.

அது தவீர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதை தொடர்ந்து உடம்பில் ஏற்படுகின்ற மாற்றங்களின்அறிகுறிகள் வெளிக்காட்டப் படும்.அவை சிலவேளைகளில் பாரதூரமானவை.

சிறுநீரக செயழ் இழப்பினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்
1.குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் அதிகரித்தல்
2.பொட்டாசியம் ,சோடியம் போன்றவற்றில் கட்டுப்பாடு இல்லாமல் போதல்
3.உடலில் அளவுக்கதிகமாக நீர் தேங்குதல்
என்பவை முக்கியமான மாற்றங்கள்.
நச்சுப் பதார்த்தங்கள் மூலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சோடியம் ,பொட்டாசியம் என்பவற்றின் கட்டுப் பாடுகள் இல்லாமல் போவதால் பல செயற்பாடுகள் பாதிக்கப்படும் .குறிப்பாக பொட்டாசியம் அதிகரிப்பதால் இதயம் செயல் இழக்கலாம்.

மருத்துவம்

சடுதியான சிறுநீரகச் செயழ் இழப்பிற்கு மருத்துவ முறையில் முக்கியமாக 3 விடயங்கள்கருத்தில் கொள்ளப்படும்.

1.சிறுநீரக செயழ் இழப்பை ஏற்படுத்திய காரணியை நிவர்த்தி செய்தல்
2.சிறுநீரக பாதிப்பால் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்தல்
3.தொடர்ந்து சிறுநீரகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை வரக்கூடிய பாதிப்புக்களுக்கு முன் ஏற்பாடு எடுத்தல்.

அநேகமான சடுதியான சிறுநீரக செயழ் இழப்புக்கள் அதற்கான காரணியை நிவர்த்தி செய்யும் போது சரியாகி மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும்.

ஆனால் அது பழைய நிலையை அடையும் வரை போதிய மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும்.உதாரணத்திற்கு பொட்டாசியம் குருதியில் அதிகரித்தால் அதை குறைத்து சரியான அளவிலே வைத்திருக்க  மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் அதிகரித்தால் அவற்றை டயாலிசிஸ் (Dialysis)எனப்படும் முறை மூலம் நீக்க வேண்டும்.

இவ்வாறு தற்காலிக கண்காணிப்புக்கள் சிறுநீரகம் மீண்டும் பழைய நிலையை அடையும் வரை வழங்கப் பட வேண்டும்.

நாட்பட்ட சிறுநீரக செயழ் இழப்பு பற்றி அடுத்த இடுகையில் ...

Sunday, December 5, 2010

மேனியா எனப்படும் மன நோய்

மேனியா (mania)எனப்படுவது ஒரு வகை மன நோய் .இந்த நோயின் ஒரு நிலைதான் ஹைப்போ மேனியா(Hypo mania) என்பதும்.சில வேளைகளில் இது டிப்பிரசன் (depression)எனப்படும் மனத் தாழ்வு நோயோடு மாறி மாறி வருவதாக இருக்கலாம்.அப்போது அது Bipolar disorderஎனப்படும்.

டிப்பிரசன்(depression) என்றால் என்ன என்று எல்லோரும் ஓரளவேனும் கேள்விப் பட்டு இருப்பீர்கள். மேனியா (mania)என்பாது அதற்கு எதிரான பல அறிகுறிகளைக் கொண்ட நோயாகும்.

1.இந்த நோய் ஏற்பட்டவர்கள் தங்களைப் பற்றி உயர்வான தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

2.அளவுக்கதிகமாக தொடர்ச்சியாக பேசுவார்கள். 

3.தொடர்ச்சியாக பேசினாலும் திடீர் திடீரென பேசுகின்ற விடயங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.அதனால்அவர்கள் தொடர்ச்சியாக பேசினாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத விடயங்களயே பேசுவார்கள்.

4.தன் மீது கொண்ட அளவுக்கதிகமான தன்னம்பிக்கையினால் பல விதமான வேலைகளைத் தொடங்குவார்கள்.ஆனால் எந்த வேலையையும் சரியாக முடிக்காமல் இடையிலே விட்டு விட்டு அடுத்த வேலையைத் தொடங்கி விடுவார்கள்.

இருக்கிற வீட்டை விட நல்ல வீடு வேண்டும் என்று வீட்டை உடைத்து விட்டு கடைசியில் ஒரு வீடுகூட இல்லாமல் இருக்குமளவுக்கு இவர்களின் நடவடிக்கை இருக்கலாம்.

5.செக்ஸில் அளவுக்கதிகமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்

6.உடுத்துகிற உடைகள் பளீச்சென்று எல்லோருக்கும் தெரிவதாக அணிவார்கள்.

7.அளவுக்கதிகமான அலங்காரம் செய்து கொள்வார்கள்.

8.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முற்பட்டு எந்த வேலையையும் முடிக்க மாட்டார்கள்.

இவர்களின் தொடர்ச்சியாக பேசும் ஆற்றல் காரணமாக அவர்கள் சாத்திரம் சொல்பவர்களாக வெளிக்காட்டப் பட முடியும்.

இந்த நிலையை தகுதியான ஒரு மன நிலை வைத்தியரின் உதவியுடன் சுகமாக்கிக் கொள்வதற்கான மருந்துகள் 
உள்ளன.

குழந்தைப் பிறப்பின் பின் எத்தனை நாட்களுக்கு இரத்தம் போகும் ?

கேள்வி 

டாக்டர் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதமாகியும் தொடர்ச்சியாக இரத்தம் போகிறது.இவ்வாறு எத்தனை மாதம்
வரை இரத்தம் போகலாம்.?

பதில் 

குழந்தை பிறந்து சில நாட்களுக்கு பெண்ணுறுப்பு வழியே இரத்தம் போன்ற திரவம் தொடர்ச்சியாக வெளிவரும்.
இது முற்று முழுதாக இரத்தம் அல்ல .இரத்தத்தோடு ,கருப்பையின் உட்பகுதியில் இருந்து பிரிந்து வரும் பகுதிகள் 
போன்றவையோடு வேறு பல சுரப்புகளும் சேர்ந்து வெளிவரும். இது லோக்கியா ..எனப்படும். ஆரம்ப ஒரு வாரகலத்திற்குள்
இவ்வாறு வெளிவருவது சிவப்பு நிறமாக இரத்தம் போலவே இருப்பதால் அது ரெட் லோக்கியா எனப்படும்.
அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அதன் நிறம் இள மஞ்சள் நிறமாகவும் பின்பு வெள்ளை நிறமாகவும் வெளியேறும்.

அப்படியல்லாமல் குழந்தை பிறந்த பின்பு தொடர்ச்சியாக இரத்தமே வெளியேறுகிறது என்று நினைப்பவர்கள் உடனடியாக 
வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். குழந்தை பிறந்து ஒரு நாளின் பின் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறினால் கூட 
அசாதாரணமானது.

Saturday, December 4, 2010

நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை 2

நீரழிவு நோயானது பூரணமாக குணப்படுத்தப்பட முடியாதது என்பதை மீண்டும் மீண்டும் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆகவே நீரழிவை பூரணமாக குணப்படுத்துகிறேன் என்று கூறும்  மாற்று வழி வைத்தியர்களுடன் சென்று 
ஏமாற வேண்டாம். .
ஆனாலும் நீரழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சீனியின் அளவை  சாதாரண அளவுகளில் கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து விதமான பாதிப்பையும் தவீர்த்து நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.

எவ்வாறு சீனியைக் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்று இந்த சுட்டியில்  பார்க்கலாம்.

நீரழிவு நோயாளி குறைந்தது மாதம் ஒரு தடவையாவது இரத்தத்தில் சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும் .மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு மாதமொருமுறை அளக்கும் போது சீனியின் அளவு
சடுதியாக அதிகரித்திருந்தால் அதற்கான காரணமாக,
  1. எடுக்கின்ற மாத்திரைகளின் அளவு போதாமை
  2. உணவிலே கட்டுப்பாடு இல்லாமை
  3. அண்மையில் ஏற்பட்ட காய்ச்சல் போன்ற உடலிற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் 
போன்ற பல வித காரணங்கள் இருக்கலாம்.இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியர் காரணத்தை ஆராய்ந்து மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்று தீர்மானிப்பார்.

அதுதவீர நீரழிவு நோயாளிக்கு திடீரென ஏற்படும் சில உடற்பிரச்சினைகளின் போது சீனியின் அளவு சடுதியாக அதிகரிக்கும். உதாரணமாக ஏதாவது காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள், சத்திர சிகிச்சைக்கு உட்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் சீனியின் அளவு சடுதியாக அதிகரிப்பதால் அந்தப் பிரச்சினைக் காலத்தில் மருந்தின் அளவு அதிகரிக்கப் பட வேண்டும். சிலவேளைகளில் தற்காலிகமாக இன்சுலின் ஊசி ஏற்ற வேண்டி வரலாம்.
ஆனாலும் அந்தப் பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் பழைய அளவு மாத்திரைகளுக்கு மாறி விடலாம். 

ஆகவே நீங்கள் நீரழிவு நோயாளி என்றால் மாதம் ஒருமுறை சீனியின் அளவை கட்டாயம் அளந்து பாருங்கள். அதேவேளை உங்கள் உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் (காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள் போன்றவை)
அந்த நேரத்திலும் உடனடியாக சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்  அந்தப் பிரச்சினைகள் காரணமாக சீனியின் அளவு சடுதியாக அதிகரித்து அந்தப் பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக்கலாம்.
 

கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள்-ஒரு மன நோய்

நமக்கு எல்லோருக்கும் வாழ்க்கையில் சின்னச் சின்ன சந்தேகங்கள் எப்போது ஏற்படும்.வெளியே புறப்படும் போது வீட்டை சரியாக பூட்டினோமா ? கேஸ் ஆFப் பண்ணினோமா ?என்ற சந்தேகங்கள் எழுந்து மீண்டும் ஒ ருதடவை 
பார்த்து விட்டுப் போவோம் .இது சாதாரண நிகழ்வு.

இதுவே அதிகமானால்?

 அதாவது நீங்கள் வெளியே புறப்பட்டு சிறிது தூரம் போனவுடன் சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் போய்ப் பார்த்து விட்டு திரும்பவும் கொஞ்ச தூரம் போனவுடன் அதே சந்தேகம் ஏற்பட மீண்டும் போய் பூட்டைப் பார்ப்பதாக மீண்டும் மீண்டும் பல முறை செய்வது ஒரு  மன நோய்.இது Obsessive-Compulsive Disorder எனப்படும்.

Obsession எனப்படுவது மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற சிந்தனைகளைக் குறிக்கும் அதாவது வீடு பூட்டினோமா ? கை கழுவிநோமா? கையில் ஏதோ
கிருமி இருக்கிறதா? இவ்வாறு பல விதமாக மீண்டும் மீண்டும் சிந்தனைகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பது Obsession எனப்படுகிறது.இந்த சிந்தனைகள்
மீண்டும் மீண்டும் ஏற்படுவது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப் பாதிப்பதுடன் அவரினால் கட்டுப் படுத்த முடியாதவையாகவும் இருக்கும். 

compulsion எனப்படுவது அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனை -களுக்கு அச்சப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்தல்.அதாவது கையில் ஏதோ கிருமி இருக்கிறது என்று சிந்தனை எழுபவர்கள் மீண்டும் மீண்டும் கை கழிவிக்  கொண்டே இருப்பது போன்றவை.இங்கு நான் குறிப்பிட்டுள்ளவை சில உதாரணங்களே .இது போல அவர்களுக்கு பல்வேறுவிதாமான சிந்த -னைகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம்.

தீவிரமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்தச் சிந்தனைகள் தொடர்ச்சியாக ஏற்படும். தீவிரம் குறைந்தவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாமல் விட்டு விட்டு சில காலங்களில் மட்டும் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மன நல வைத்தியரின் ஆலோசனையுடன் மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் மன நிலை ரீதியாக நோயாளிக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனைகளை கட்டுப் படுத்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கு சரிவராவிட்டால் மருந்துகள் பாவிக்கப்படும்...



வெளியேற வேண்டிய சாதாரண விந்தின் அளவு

கேள்வி 

டாக்டர் நான் சுய இன்பத்தில் ஈடுபடும் போது மிகவும் குறைவான அளவிலேயே விந்துகள் வெளியேறுவதாய் உணர்கிறேன்.
இதை எப்படி சரி செய்வது.(தயவு செய்து பெயர் வெளியிட வேண்டாம்)

பதில்

விந்து(Sperm) எனப்படுவது கண்ணுக்குத் தெரியாத அமைப்பு.அதை உங்கள் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. வெளிவருகின்ற திரவம் சுக்கிலப் 
பாயம்( Seminal fluid)எனப்படும். இதிலே விந்துகள் கலந்திருக்கும். விந்துகள் தவீர சுக்கிலப் பாயத்தில் விந்து உயிர்வாழ்வதற்குத் தேவையான 
பல்வேறு பதார்த்தங்களும் கலந்திருக்கும்.ஒருதடவையில் வெளியேறும் சுக்கிலம் பாயத்தின் அளவு இரண்டு மில்லி லீட்டருக்கும்
அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.2 மில்லி லீடர் என்பது மிகவும் சிறிய அளவு.அதனால நீங்கள் மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

வைத்தியர் உங்கள் நோயினை கண்டு பிடிப்பது எப்படி

ஒரு வைத்தியரிடம் நீங்கள் செல்லும் அடிப்படையில் அவர் முதலில் உங்களோடு உரையாடுவார் , பின்பு உங்களை சோதித்துப் பார்ப்பார்,பின்பு சில மருத்துவச் சோதனைகள் செய்யும் படி கேட்பார், பின்பு உங்களுக்குரிய மருந்துகளை கொடுப்பார்.

என்ன அடிப்படையில் மருத்துவர் உங்கள் நோயை இனங்காண்கிறார் என்பதைப்பற்றி ஒரு அடிப்படை அறிவைத் தருவதற்காகவே இந்தப் பதிவு.

முதலில் உங்களோடு உரையாடும் போது வைத்தியர் உங்கள் நோயின் அறிகுறிகளை மனதிலே குறித்துக் கொள்வார். அந்த அறிகுறிகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கக் கூடிய சாத்தியமான நோய்களை மனதிலே பட்டியல் இட்டுக் கொள்வார்.

இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் உள்ள நோய்களின் போது உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களைச் சோதிக்கும் போது அப்படி ஏதாவது அவர் பட்டியல் இட்ட நோய்களுக்குரிய அடையாளங்கள் உள்ளதா என்று அவதானிப்பார். இப்போது உங்களுக்குத் சாத்தியமான நோய்களின் பட்டியல் சிறிதாகிவிடும். அதாவது நீங்கள் சொன்ன அறிகுறிகளை வைத்து அவர் மனதிலே உருவாகியஅந்த பட்டியல் உங்களை சோதித்த பின்பு இன்னும் சிறிதாகி இப்போது உங்களுக்கு சாத்தியமான ஒரு சில நோய்களில் உங்களுக்கு உண்மையில் என்ன நோய் இருக்கினறது என்று உறுதிப் படுத்திக் கொள்ள அவருக்கு குறிப்பிட்ட மருத்துவச் சோதனைகள் தேவைப் படலாம்.

உதாரணமாக ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை , எக்ஸ்ரே பரிசோதனை போன்றவை.சில நோய்கள் வெறுமனே உங்கள் அறிகுறிகள் மற்றும் வைத்திய உங்களைச் சோதிக்கும் போது காணும் அடையாளங்களை வைத்தே அறியப் பட்டு விடலாம்.அந்த நேரத்தில் எந்த விதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லாமலேயே உங்களுக்கு மருந்து வழங்கப் படலாம்.

இறுதியாக உங்கள் நோய் நிச்சயமாக உறுதிப் படுத்தப் பட்ட பின்பு, உங்கள் வயது, பால் , பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களுக்குரிய மருந்துகளை வழங்குவார்.

அதாவது ஒரே நோய்க்கு பல விதமான மருந்துகள் இருக்கின்றன , சில சிருவர்கலிலே பாவிக்க முடியாது, சில கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க முடியாது , சில மருந்துகள் விலை உயர்ந்தவை எல்லோருக்கும் கொடுக்க முடியாது, சில பாலூட்டம் கொடுக்கும் அன்னையருக்கு கொடுக்க முடியாது, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே வைத்தியர் ஒருவருக்குரிய மாத்திரைகளை நிர்ணயிப்பார்.

Friday, December 3, 2010

எலிக்காய்ச்சல்

எலிக்காய்ச்சல் எனப்படுவது ஆங்கிலத்திலே Leptospirosis  எனப்படும். இது spirochete.எனப்படும் பக்டீரியா வகைய்நால் ஏற்படுகிறது.
இந்த நோய் பொதுவாக எலியில் இருந்தே மனிதனுக்குத் தொற்றும்.எலியில் இருந்து பக்டீரியாக் கிருமிகள் அதன் சிறுநீர் மூலம் நீரை சேரும்.இவ்வாறு பக்டீரியாக்கள் கலந்த நீர் எமது தோளிலே உள்ள சிறிய காயங்கள் மூலம் எமக்குத் தோற்றி நோயினை ஏற்படுத்தும்.இதனால் இது நீரிலே வேலை செய்யும் விவசாயிகள் ,பண்ணை யாளர்களுக்கே அதிகம் ஏற்படக்கூடிய 
சந்தர்ப்பம் உள்ளது.ஆனால் குளங்களில் குளிப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்..

அறிகுறிகள்

இரண்டு கட்டமாக இதன் தாக்கம் ஏற்படலாம்.

முதற்கட்டம்
காய்ச்சல்,தலையிடி உடம்பு வலி ,குளிர்  மற்றும் கண்கள் சிவத்தல்.இது சற்று சுகமாகுவது போன்ற உணர்வு ஏற்பட்டு மீண்டும் 
சில நாட்களில் இரண்டாம் கட்ட பாதிப்பு ஏற்படும்

இரண்டாம் கட்டம்
இந்த நிலையில் ஆரம்ப அறிகுறிகள் மீண்டும் தொடங்குவதோடு மேலும் தீவிரமான பாதிப்புக்கள் ஏற்படலாம்.
இதன் போது இது ஈரல் ,சிறுநீரகம், மூளை,இதயம் போன்றவற்றை பாதிக்கலாம்.

ஈரல் பதிப்பதால் கண்கள் மஞ்சலாகலாம்(jaundice).
சிறுநீரக பாதிப்பால் சடுதியான சிறுநீரக செயல் இழப்பு ஏற்படலாம்.

மருத்துவம்

இது பாக்டீரியாவினால் நோய் என்ற படியால் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப் பட்டால் அன்டி பயட்டிக்ஸ் மூலம் குணப்படுத்தப் படலாம்.
இது தவிர சிருகீரக் பாதிப்பு ,ஈரல் பாதிப்பு ஏற்படவர்களுக்கு மிகவும் தீவிரமான மருத்துவக் கண்காணிப்புத் தேவை.

டெங்குக் காய்ச்சல்

டெங்குக் காய்ச்சலானது ஒருவகை  வைரசினால் ஏற்படுகின்றது. இது
 Aedes  aegypti எனப்படும் நுளம்பினால் நோய் ஏற்பட்ட ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் தோற்றும். அதாவது நோயாளியை கடித்த நுளம்பு உங்களைக் கடிப்பதன் மூலம் மட்டுமே இது உங்களுக்குத் தொற்றும்.அது தவிர வேறு எந்த முறைகளாலும் அது தொற்றினை ஏற்படுத்துவதில்லை.


அதனால் நோயாளியை உங்களில் இருந்து பிரித்து வைக்க வேண்டியதில்லை.
உங்களையும் நோயாளியையும் நுளம்புக் கடியில் இருந்து பாதுகாப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

டெங்குக் காய்ச்சல் பல்வேறு தீவிர நிலைமைகளைக் கொண்டது

1.சாதாரண காய்ச்சல்(uncomplicated dengue fever)
இதன் போது குருதியில் உள்ள platelet எனப்படும் குருதிச் சிருதட்டுக்களின் எண்ணிக்கை குறையும். சாதாரணமாக இது 150000 என்ற அளவிற்கு மேலே இருக்கும். தேங்கு நோயாளிகளில் இது படிப்படியாக குறையலாம். இது அளவுக்கதிகமாக குறைவதால் குருதிப் பெருக்குஏற்பட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.
அநேகமானவ்ர்களில் குறைந்த குருதிச் சிறுதட்டுக்கள் அடுத்த கட்டத்திற்கு போகும் முன்னமே மீண்டும் அதிகரித்து சாதாரண நிலையை அடைந்து நோய் 
சுகமாகி விடும் பொதுவாக காய்ச்சல் மறைந்த பின்னும் குருதிச் சிருதட்டுகள் குறைவதால் காய்ச்சல் விட்ட பிறகும் சில நாட்களுக்கு வைத்திய சாலையில் இருக்க வேண்டி வரலாம். 
.

2.குருதிப் பெருக்குக் காய்ச்சல்(Dengue hemorragic fever)

இது குருதிச் சிறுதட்டுக்கள் குறைவதால் குருதி இரத்தக் குழாய்களில் இருந்து வெளியேறுவதால் ஏற்படும். இதன் போது குருதி இருமும் போது , சிறுநீர் கழிக்கும் போது அல்லது பெண்ணுறுப்பு வழியே வெளியேறலாம். அல்லது வயிற்றுக் குழி ,நெஞ்சுக் குழி மூளை போன்ற வெளித்தெரியாத இரத்தப் பெருக்காக இருக்கலாம்.

3.இறுதிநிலை டெங்கு(dengue shock syndrom)
இது அளவுக்கதிகமான குருதியில் உள்ள திரவங்கள் வெளியேறுவதால் குருதி செறிவாகுவதுடன் மொத்தக் குருதியின் அளவும் 
குறைவதால் குருதி அமுக்கம் குறைவதால் ஏற்படும். இந்த நிலை மிகவும் தீவிரமானதும் இறப்பை ஏற்படுத்தக் கூடியதும்.
இவர்களுக்கு அதிதீவிர மருத்துவக் கண்காணிப்புத் தேவை.

டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள்

  1. குளிரான உணர்வுடன் காய்ச்சல்
  2. தலையிடி
  3. உடம்பு நோ
  4. கண்களின் பின்னால்/கண்களை அசைக்கும் போது வலி
  5. முகம் வெட்கத்தில் சிவந்தது போன்று மாறுதல் 

மேற்சொன்னவை சாதாரண டெங்குக் காய்ச்சலின் அறிகுறியாகும். 
அப்போது ஒருவரின் ரத்ததத்தில் குருதிச் சிறுதட்டுக்கள் அளக்கப்பட வேண்டும். அது 100000 என்ற அளவை விடக் குறையும் போது 
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அடுத்த கட்டமான குருதிப் பெருக்கு காய்ச்சல் நிலையை அடையும் அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையின் அறிகுறி ஏதோ ஒரு வகையில் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுதல்.(இருமும் போது,சிறுநீருடன், மாதவிடாயுடன் அளவுக் -கதிகமான இரத்தப்போக்கு,முரசுகளில் இருந்து இரத்தம் வெளியேறுதல்)

ஆகவே காய்ச்சலோடு ஏதாவது பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்லுங்கள்.

மருத்துவம் 

இது வைரசினால் ஏற்படுகின்ற காய்ச்சல் என்ற படியால்  இதை சுகப்படுத்தக் கூடிய மருந்துகள் இல்லை.ஆனாலும் இது தானாக சுகமாகக் கூடிய நோயாகும்.

குருதிப் பெருக்கு ஏற்படுபவர்காலிலே தற்காலிகமாக குருதிச் சிறுதட்டுக்கள்(Platelets ) ஏற்றலாம்.

மற்றும் மிகவும் முக்கியமாக இவர்களுக்கு போதியளவு நீராகாரம் வழங்குவதன் மூலம் இந்த நோயின் தீவிரம் குறைக்கப் படலாம்.காய்ச்சல் ஏற்பட்ட அனைவரும் போதியளவு நீராகாரம் அருந்த வேண்டியது கட்டாயமாகும். அளவுக்கதிகமான வாந்தி மூலம் நீர் அருந்த முடியாதவர்களுக்கு செலைன் (Saline)மூலம் நீர் வழங்கப்
படவேண்டும்.

அதுதவீர காய்ச்சலைக் குறைக்க பரசிட்டமோல் பாவிக்கப்படலாம்.
காய்ச்சல் ஏற்பட்ட எவரும் NSIAD எனப்படும் வகையச் சேர்ந்த அஸ்பிரின்(Aspirin), டைக்குளோ போனிக் சோடியம்(Diclofenac), புருபன்(Brufen) , மேபினாமிக் 
அசிட் (Mefinaamic acid) போன்ற மருந்துகளை வைத்தியரின் அனுமதி இன்றி உட்கொள்ள கூடாது.டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தை அவை 
அதிகரித்து விடலாம்.