சிலவேளைகளில் கருக்கட்டப்பட்ட சிசு கருப்பையின் உற்பகுதிக்கு வராமல் பலோப்பியன் குழாயினுள்ளே தங்கி விடலாம் அல்லது பலப்பியன்
குழாய்க்கு வெளியே வயிற்றுக் குழிக்குள் அல்லது சூலகத்திலே சென்று ஒட்டிக் கொள்ளலாம்.
இதுவே கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல் (Ectopic pregnancy) எனப்படுகிறது.
இந்த நிலைமை ஏற்பட்ட பெண்களிலே கரு வளர வளர அதற்குரிய போதிய இடம் கிடைக்காமல் போவதால் அது வெடிக்கலாம்.
இது Ruptured ectopic pregnancy ( கருப்பைக்கு வெளியேயான கரு வெடிப்பு ) எனப்படும்.
இது சில நிமிடங்களிலேயே உயிரைப் பறித்து விடக்கூடிய பாரதூரமான நிலையாகும்.
ஆகவே கரு வெடிப்புக்கு முன்னமே இதை கண்டு பிடிப்பது அவசியமாகும்.
சாதாரணமாக வெடிப்படைவதற்கு முன் இது சிறிதளவு நோவினை (வயிற்று வலியினை) ஏற்படுத்தும் .இந்த நேரத்தில்உடனடியாக வைத்தியரை நாடுவது அவர்களின் உயிரை இலகுவாக காப்பாற்றி விடும்.
ஆனாலும் சில பெண்களிலே ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே இந்த வெடிப்பு ஏற்படலாம். அவர்களும் மிகவும் விரைவாக வைத்திய சாலைக்கு செல்வதன் மூலம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எவ்வாறானா சந்தர்ப்பத்தில் நாம் கருப்பைக்கு வெளியேயான கருத்தரித்தல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டும்?
உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எந்த பெண்ணும் தனக்கு அடிவயிற்று வலி ஏற்படும் போது முதலில் கவனத்தில்
கொள்ளவேண்டியது இந்த நிலைமையைத்தான். அதுவும் மாதவிடாய் பிற்போன பெண்கள் அல்லது கர்ப்பம் உண்டாகியுள்ளதாக சிறுநீர் மூலம் உறுதி செய்து கொண்டாலும் இதுவரை ஸ்கேன் செய்து கொள்ளாத பெண்கள் தங்களுக்கு வயிற்று வலி வந்தால் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது இந்த நிலைமையைத்தான்.
யாருக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்?
1.வயிற்றிலே முன்பு ஏதாவது சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண்கள்
2.கருப்பை அலர்ச்சி அல்லது பலோப்பியன் குழாய் அலர்ச்சி ஏற்பட்ட பெண்கள்
3.கர்ப்பத்தடை லூப் போட்டுக் கொண்டபின் தவறுதலாக கரு உண்டான பெண்களிலே
இந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.
மேலும் ஏற்கனவே இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடுத்த முறையும் இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.
இருந்தாலும் இவை எதுவுமே இல்லாத சாதாரண பெண்களிலே கூட இது ஏற்படலாம்.
இதன் ஆரம்ப அறிகுறிகள் எவை?
பொதுவாக இது கருத்தரித்து மூன்று மாத காலத்துக்குள்ளேயே பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரம்ப அறிகுறியாக பிற்போன மாதவிடாயுடன் தொடர்ச்சியான அடி வயிற்று வலி ஏற்படும்.
சில பெண்களிலே சிறிதளவான இரத்தம் பிறப்பு வழியூடாக வெளிவரலாம்.
சற்று தீவிரமடையும் போது மயக்கமடையும் உணர்வு, மூச்செடுக்கச் சிரமம் , தோள்ப்பட்டை வலி போன்றவை ஏற்படும்.
மேலே சொன்ன அறிகுறிகள் ஏற்படுவது கரு வெடிப்பதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தக் கசிவு ஏற்படுவதால் ஏற்படுபவை.
கரு வெடிக்கும் போது சடுதியாக அதிகரித்த வயிற்று வலியுடன் மயக்கமடையலாம்.அந்த நிலையிலே சில நிமிடங்களிலே கூட உயிர் இழப்பு ஏற்படலாம்.
ஆகவே உடலுறவில் ஈடுபடும் எந்தக் பெண்ணும் வழமைக்கு மாறாக வயிற்று வலி ஏற்படும் போது உடனடியாக வைத்தியரை நாடி இந்த நிலைமை இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நிலைமைக்கு அனேகமாக சத்திர சிகிச்சையே தீர்வாக அமையும்.
இருந்தாலும் இரத்தக் கசிவு ஏற்பட முன்னமே மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் இரசான மருந்துகள் மூலம் கரு சிதைக்கப்படலாம்.
சத்திர சிகிச்சை வயிற்றை வெட்டுவதன்(Laparotomy) மூலம் அல்லது குழாய் போன்ற அமைப்பி உட்செலுத்தும் லப்பிராஸ் கோப்பி(Laparascopy) முறை
மூலம் மேற்கொள்ளப் படலாம்.
இதை நோயின் தீவிரத்தைப் பொறுத்து வைத்தியரே தீர்மானிப்பார்.
ஒருமுறை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மீண்டும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். ஆகவே அடுத்தமுறை
கருத்தரித்தவுடன் ஸ்கேன் செய்து கரு கருப்பையின் உள்ளேதான் தங்கியுள்ளது என்பதை ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
3 comments:
good post
கேள்விபட்டு இருக்கிறேன் இன்றுதான் விளக்கம் கண்டேன். மிகவும் அருமை.
தங்கள் சேவைக்கு நன்றி
நன்றி
Post a Comment