Tuesday, November 23, 2010

கர்ப்ப கால நீரழிவு.

சில கர்ப்பிணிகளுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் மட்டும் நீரழிவு நோய் ஏற்பட்டு குழந்தை பிறந்தபின் சுகமாகிவிடலாம்.

இதை எவ்வாறு கண்டு பிடிக்கலாம்?

ரத்தப் பரிசோதனை மூலமே இது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
கர்ப்பகாலத்திலே சாதாரணமானவர்களின் சிறு நீரிலே கூட சீனி காணப்படுவதால் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் நீரழிவு நோய் உள்ளதா என்று உறுதிப் படுத்திக்கொள்ள முடியாது.

கர்ப்பகால நீரழிவுக்கும் கர்ப்பம் அற்றவர்களில் ஏற்படும் நீரழிவுக்கும் என்ன வித்தியாசம்?

கர்ப்பகால நீரழிவு குழந்தைப் பிறப்போடு பூரணமாக சுகமாகிவிடும்.ஆனால் மற்றவகையான நீரழிவு பூரணமாக சுகமாவதில்லை. வாழ்நாள் பூராகவும் மருந்து எடுக்கவேண்டி வரலாம்.

கர்ப்ப கால நீரழிவானது கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களுக்குப் பிற்பட்ட காலத்திலே ஏற்படும்.ஆகவே கர்ப்பம் உண்டாகிய ஒவ்வொரு பெண்ணும் ஆரம்பத்திலே (முதல் மூன்று மாதத்துக்குள்)சீனியின் அளவை சோதித்தறிந்து கொள்ளவேண்டும்.அந்த ஆரம்பகாலத்தில் நீரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அது கர்ப்பகால நீரழிவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் குறைவு.

அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்தவுடன் உங்கள் சீனியின் அளவை சொத்திதுப் பார்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே சீனி அதிகமாக இருந்தால் அது கர்ப்ப கால நீரழிவாக இருக்க முடியாது. மாறாக உங்களுக்கு இருப்பது நாட்பட்ட
நீரழிவாக இருக்கலாம்.
அதேவேளை ஆரம்பத்தில் சீனியின் அளவு சாதாரணமாக இருப்பவர்கள் மீண்டும் 5-6 மாதமளவில் சீனியை சோதித்தறிய வேண்டும்.
அப்போது அவர்களுக்கு நீரழிவு இருந்தால் அதுவே கர்ப்பகால நீரழிவு.
அதாவது கர்ப்பம் உருவாகும் போது நீரழிவு இல்லாத ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் உருவாகிய பின் நீரழிவு ஏற்பட்டால் அதுவே கர்ப்பகால நீரழிவு.

கர்ப்பகால நீரழிவு ஏற்பட்ட குழந்தைகளுக்கு அந்த நீரழிவினால் அங்கக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை.

ஆனாலும் அந்தக் குழந்தைகள் நிறை அளவுக்கதிகமாக கூடிவிடுவதினால் பிறக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் கருப்பையினுள்ளே நீரின்( அம்நியோட்டிக் திரவம்)  அளவு அதிகரிப்பதாலும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.




நீரழிவு நோயுள்ள  தாய்க்குப் பிறந்த பிறந்த நிறை கூடிய குழந்தை.

மிகவும் முக்கியமாக நீரழிவு நோய் உள்ள கர்ப்பிணியின் குழந்தை கருப்பையினுள்ளே திடீரென எந்தவிதமான காரணக்களும் இல்லாமல் இறந்தும் விடலாம்.இவ்வாறு இறப்பு நடைபெறுவது குறிப்பாக கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில்.அதனால் நீரழிவு நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும் தினமாக கொடுக்கப்பட்ட தினத்திற்கு
இரு வாரங்களுக்கு முன்னமே குழந்தை பிறக்கச் செய்யப்படுகிறது.அதற்கர்பால் கருப்பையில் குழந்தை இருப்பது
குழந்தைக்கு ஆபத்தாக அமையலாம்.

மேலே சொன்ன பாதிப்புக்களை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு அவர்களின் சீனியின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சீனிக் கட்டுப்பாடு ஆரம்பத்தில் உணவு முறை மூலம் முயற்சி செய்து முடியாமல் போனால் இன்சுலின் மூலம் மேற்கொள்ளப்
படும். இன்சுலின் தவிர்ந்த எந்த மாத்திரையும் கர்ப்பகாலத்தில் பாவிக்கப் பட முடியாது.

குழந்தை பிறந்த பின் அவர்களின் நீரழிவு பூரணமாக குணமாகிவிடும்.
ஆனாலும் கர்ப்ப காலத்தில் நீரழிவு ஏற்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் சாதாரணமான நாட்பட்ட நீரழிவு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருடம் ஒரு முறையேனும்
நீரழிவு உள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்தில் முன்வையுங்கள் .

1 comment:

push said...

கர்ப்பம் தரித்த அனைத்து பெண்களுக்கும் மிக மிக அவசியமான தகவல் துமிழ், மிக்க நன்றி.