Thursday, December 2, 2010

நச்சுக் கொடி கீழிறக்கம்-ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியது



பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.





                                                  நச்சுக்கொடி (placenta)


இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும்.

எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும்.

முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான 
நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை.







கருப்பை வாயில் வரை நச்சுக்கொடி(placenta) கீழிறங்கி இருக்கும் ஆபத்தான நிலை 

இந்த நோயின் அறிகுறி

கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம் தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் 
செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாத்
படியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே  ஆக  வேண்டும்..

இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட 
நாட்களுக்கு இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு முன்னமே சீசர் செய்யப்படும்.

சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்ல 
வேண்டியதுடன் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் சாதாரணமான
முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்....

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் ஏற்படலாம்.

சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே அவர்களுக்கு சீசர் செய்யப்படும். 

அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும் இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம்.

அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள வேண்டும்.

மிகவும் முக்கியமாக இந்த நோயாளிகள் குழந்தை பெறும் வரை முற்று முழுதாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும்..

Wednesday, December 1, 2010

கர்ப்பிணிகளுக்கு மலம் கறுப்பாக போவதேன்?

கேள்வி 

டாக்டர் ! நான் நான்கு மாதக் கர்ப்பிணி. எனக்கு சில நாட்களாக வயிற்றிலே ஏதோ செய்வது போன்ற உணர்வு இருக்கிறது. சரியாக சாப்பிட முடியவில்லை. மலம் போவது கஷ்டமாக இருக்கிறது. சில வேளைகளில் மலம் கறுப்பு நிறமாகப் போகிறது.ஒரு நண்பியிடம் கேட்ட போது கர்ப்ப காலத்தில் கறுப்பாக மலம் போவது சாதாரணமானது என்கிறாள்.அது உண்மையா?
அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்

நல்லது சகோதரி. கர்ப்ப காலத்தில் கருப்பாக மலம் போவதற்கும் கர்ப்பத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
ஆனாலும் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் இரும்புச் சத்துக் குளிசைகள் காரணமாக மலம் கறுப்பாக போகலாம்.
அத்தோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசிக்குறைவும், வயிற்றில் உள்ள அசௌகரியங்களும் கூட அந்த மாத்திரையால் ஏற்பட்டதாக இருக்கலாம்.அதனால் வைத்தியரிடம் சொல்லி வேறு விதமான மாத்திரைகளை பாவித்துப் பாருங்கள்.அதற்காக அச்சப் படத் தேவை இல்லை.

எயிட்ஸ் பற்றிய பொதுவான சில சந்தேகங்களும் பதில்களும்

இன்று எயிட்ஸ் தினம். அனேகமாக எயிட்ஸ் பற்றி எல்லோருக்கும் நிறைய விடயங்கள் தெரிந்திருக்கும். அதனால் நான் உங்களுக்கு  இருக்கக் கூடிய சில சந்தேகங்களை பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.

முத்தமிடுவதால் எயிட்ஸ் பரவுமா?

உமிழ் நீரில் வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் குறைவானாலும் 
உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போது ஒருவருக்கு வாயினுள்ளே காயங்களோ சிறிய ரத்தக் கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவலாம்.

வாய்வழிப் புரர்ச்சியால் எயிட் பரவலாமா? 

நிச்சயமாகப் பரவலம்.ஆனால் பரவுகின்ற வீதம் குறைவு.


எயிட்ஸ் உள்ளவர்களோடு சேர்ந்து விளையாடலாமா?

நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, ரத்தத் தொடர்பற்ற எந்த விதத்திலும் எயிட்ஸ் நோயாளியோடு நீங்கள் பழகலாம்.


எயிட்சுக்கு மருந்துகள் உள்ளனவா?

ஆம். இதை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வாழ்க்கைக் காலத்ததை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த மருந்துகள் உதவும்.


இரத்தம் ஏற்றுவதன் மூலம் எயிட்ஸ் பரவலாமா?

ஆம். ஆனாலும் அனைத்து வைத்திய சாலைகளிலும் இப்போது இரத்தம் பரிசோதிக்கப்பட்ட பின்பே ஏற்றப்படுவதால் அதற்காக அஞ்ச வேண்டியதில்லை.


ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவலாமா?

ஆம். இதன் போதுதான் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் அதிகம்.


தலைமுடி வெட்டும் போது எயிட்ஸ் தொ ற் றலாமா?

ஒரு பிளேட் பல பேருக்குப் பாவிக்கப்ப்படும்போது தவறுதலாக சிறிய வெட்டுகள் ஏற்பட்டால் எயிட்ஸ் தொற்றலாம்.
நீங்கள் தலைமுடி வெட்டும் போது உங்களுக்காக புது பிளேட் போடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


பச்சை குத்தும்போது எயிட்ஸ் தொ ற் றலாமா ?

ஆம். ஒரு உபகரணம் பல பேருக்கு பாவிக்கப்படுவதால் தொற்ற சந்தர்ப்பம் உள்ளது.


எயிட்ஸ் நோயாளி தாய்ப்பால் கொடுக்கலாமா?

இல்லை.

உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கேளுங்கள் !