Friday, March 12, 2010

உடலுறவின் பின்பு ரத்தம் வந்தால் கவனம் !

சில பெண்களுக்கு உடலுறவின் பின்பு அவர்களின் பெண் உறுப்பிலே இரத்தம் வெளிப்படலாம்.குறிப்பாக சற்று வயது முதிர்ந்த பெண்களிலே ( நாப்பது வயதலவான) பெண்களிலே உடலுறவின் பின் ரத்தம் வெளி வருமானால் உடனடியாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
ஏனென்றால் இது கருப்பைப் பையின் கழுத்துப் பகுதியிலே ஏற்படுகின்ற புற்று நோயின்(cervical carcinoma) ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.
புணர்ச்சியானது ஆங்கிலத்திலே coitus எனப்படுகிறது. புணர்ச்சியின் பின்பு ரத்தம் வெளிப்படுதல் post coital bleeding எனப்படுகிறது.
இப்படியான ரத்தப் போக்கு புற்று நோய் தவிர்ந்த வேறு பல நோய்களிலும் ஏற்படலாம் என்றாலும் , இவர்களில் புற்று நோய் இல்லை என்பதை வைத்தியரை நாடி உறுதி செய்து கொள்வது நல்லதாகும்.
உடலுறவின் பின் ரத்தம் போவது தவிர்ந்த கருப்பைக் கழுத்து புற்று நோய்க்கான மற்றைய அறிகுறிகளாவன , சாதாரணமாக மாதவிடாய் ஏற்படும் காலம் தவிர்ந்து மாதவிடாய்க் காலத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் ரத்தம் வெளிவருதல்(intermenstrual bleeding), மற்றும் பிறப்பு உறுப்பிலே இருந்து தகாத மனமுடைய (நாற்றமடிக்கும் ) திரவங்கள் வெளிவருதல்(offensive vaginal discharge).

Tuesday, March 9, 2010

கர்ப்பமான பெண்ணில் ஏன் மாதவிடாய் ஏற்படுவதில்லை?

மாதவிடாய் என்பது மாதா மாதம் ஒரு பெண்ணின் யோனிவழியே ரத்தம் வெளிவருகின்ற ஒரு செயன்முறை என்றே அநேகம் பேர் தெரிந்து வைத்து இருப்பீர்கள்.

உண்மையில் மாதவிடாய் என்றால் என்ன ?

கருத்தரிப்பதற்கு ஒரு பெண்ணை தயார் செய்யும் ஒரு செயமுறையின் விளைவே மாதவிடாய். கருத்தரித்தல் என்பது ஆண்களின் விந்து எனப்படும் உயிரணுவும் , பெண்களின் முட்டை எனப்படும் உயிரணுவும் ஒன்று சேரும் செயன்முறையாகும்.

ஆண்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போதும் விந்துகள் வெளியேறும்.

பெண்களிலே முட்டை உருவாகுவது உடலுறவின் போதல்ல. அவர்கள் பூப்படைந்த காலத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை (அநேகமாக மாதம் ஒருமுறை ) இந்த முட்டைகள் உருவாகும்.

ஆண்களிலே விதைகள் விந்துகளை உருவாக்குவதைப்போல பெண்களிலே சூலகம் என்ற உறுப்பு இந்த முட்டைகளை உருவாக்கி வெளிவிடும். இந்த முட்டை வெளிவந்து மூன்று நாட்களுக்குள் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டு அவளின் யூனிவழியே விந்து உட்செலுத்தப்ப்படுமானால் அந்த முட்டை கருக்கடப்பட்டு குழந்தையாக விருத்தி அடையும்.
அவ்வாறு கருக்கட்டல் நடைபெற்றால் அந்தக் குழந்தையை தாங்கிக் கொளவதற்காக அவளின் கருப்பை சில ஆயத்தங்களை செய்யும். கருப்பையின் உடபகுதி நன்கு விருத்தியடைந்து ரத்த ஓட்டம் அதிகரித்து கருக்கட்டிய குழந்தை விருத்தியடையக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படும்.

இது மாதாமாதம் முட்டை வெளியேறும் போதெல்லாம் நடைபெறும். ஆனால் அந்தப்பெண் உடலுறவில் ஈடுபட்டு கருக்கட்டல் நடைபெறா விட்டால் விருத்தியடைந்த இந்த கருப்பையின் பகுதி பிரிந்து யோனிவழியே வெளியேறும்.
அப்போது உருவாகிய முட்டையும் வெளியேறும்.
இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.

மாறாக கருக்கட்டல் நடைபெற்றால் அந்த கரு விருத்தியடைந்த கருப்பையின் உடப்குதியில் ஒட்டிக்கொண்டு குழந்தையாக வளரத்தொடங்கும், இதனால் கர்ப்பமான பெண்ணில் மாதவிடாய் ஏற்படுவது தடைப்படும்.

Friday, January 15, 2010

உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின் உயரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது.

அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் நிறை பேணப்பட வேண்டும்

உங்கள் நிறை உங்களுக்குப் போதுமானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?

அதற்காக உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index ) என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது . உங்கள் உடலின் உடற் திணிவுச் சுட்டியை கணிப்பதன் மூலம் உங்கள் உடல் நிறை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .

உடற் திணிவுச் சுட்டி = உங்கள் உடலின் நிறை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு


அதாவது நீங்கள 70kg நிறையும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற்தினிவுச் சுட்டி
= 70 /1.6 x 1.6
=27.3
இனி இந்த உடற்தினிவுச் சுட்டியின் மூலம் நமது நிறை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

மிகவும் இலகுவானது...

உங்கள் உடற் திணிவுச் சுட்டியை கணித்த பின் கீழே உள்ள அட்டவணையில் உள்ள படி உங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
  • உங்கள் உயரத்திற்கு ஏற்ப நிறை போதாது (Underweight ) = <18.5
  • உங்கள் உடல் நிறை பொருத்தமானது (Normal weight )= 18.5-24.9
  • உங்கள் உடல் நிறை அதிகமானது (Overweight )= 25-29.9
  • உங்கள் உடல் நிறை அளவுக்கு அதிகமாகிவிட்டது (Obesity )= 30 அல்லது அதற்கு மேலே
அதாவது உங்கள் உடற்தினிவுச் சுட்டி 18.5 யை விட குறைவானது என்றால் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிறையை பெறவேண்டும் என்று அர்த்தம். 18.5 யிற்கும் 24.9 யிற்கும் இடையில் இருக்குமானால் உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானது என்று அர்த்தம். 25 யிற்கும் அதிகமானால் உங்கள் உடல் நிறை அதிகமாகி விட்டது என்றும் , 30 யிற்கும் அதிகம் என்றால் நீங்கள் ஆபத்தான அளவுக்கு பருமனாகி விட்டீர்கள் என்றும் அர்த்தம். எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக்கு என்று சொன்னீர்கள் என்றால் கீழே உள்ள லின்கிலே சென்று அங்குள்ள கணிப்பானில் உங்கள் உயரத்தையும் , நிறையையும் பதிவு செய்து உங்களின் உடற்தினிவுச் சுட்டியை (BMI) அறிந்து கொள்ளுங்கள். http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm