Saturday, December 4, 2010

நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை 2

நீரழிவு நோயானது பூரணமாக குணப்படுத்தப்பட முடியாதது என்பதை மீண்டும் மீண்டும் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆகவே நீரழிவை பூரணமாக குணப்படுத்துகிறேன் என்று கூறும்  மாற்று வழி வைத்தியர்களுடன் சென்று 
ஏமாற வேண்டாம். .
ஆனாலும் நீரழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சீனியின் அளவை  சாதாரண அளவுகளில் கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து விதமான பாதிப்பையும் தவீர்த்து நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.

எவ்வாறு சீனியைக் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்று இந்த சுட்டியில்  பார்க்கலாம்.

நீரழிவு நோயாளி குறைந்தது மாதம் ஒரு தடவையாவது இரத்தத்தில் சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும் .மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு மாதமொருமுறை அளக்கும் போது சீனியின் அளவு
சடுதியாக அதிகரித்திருந்தால் அதற்கான காரணமாக,
  1. எடுக்கின்ற மாத்திரைகளின் அளவு போதாமை
  2. உணவிலே கட்டுப்பாடு இல்லாமை
  3. அண்மையில் ஏற்பட்ட காய்ச்சல் போன்ற உடலிற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் 
போன்ற பல வித காரணங்கள் இருக்கலாம்.இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியர் காரணத்தை ஆராய்ந்து மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்று தீர்மானிப்பார்.

அதுதவீர நீரழிவு நோயாளிக்கு திடீரென ஏற்படும் சில உடற்பிரச்சினைகளின் போது சீனியின் அளவு சடுதியாக அதிகரிக்கும். உதாரணமாக ஏதாவது காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள், சத்திர சிகிச்சைக்கு உட்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் சீனியின் அளவு சடுதியாக அதிகரிப்பதால் அந்தப் பிரச்சினைக் காலத்தில் மருந்தின் அளவு அதிகரிக்கப் பட வேண்டும். சிலவேளைகளில் தற்காலிகமாக இன்சுலின் ஊசி ஏற்ற வேண்டி வரலாம்.
ஆனாலும் அந்தப் பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் பழைய அளவு மாத்திரைகளுக்கு மாறி விடலாம். 

ஆகவே நீங்கள் நீரழிவு நோயாளி என்றால் மாதம் ஒருமுறை சீனியின் அளவை கட்டாயம் அளந்து பாருங்கள். அதேவேளை உங்கள் உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் (காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள் போன்றவை)
அந்த நேரத்திலும் உடனடியாக சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்  அந்தப் பிரச்சினைகள் காரணமாக சீனியின் அளவு சடுதியாக அதிகரித்து அந்தப் பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக்கலாம்.
 

0 comments: