Monday, November 29, 2010

மூட்டு நோய் - SLE

SLE (Systemic lupus erythematosus )எனப்படுவது ஒரு தன்னிச்சைக் கல அழிப்பு நோயாகும்(Autoimmune disease). தன்னிச்சைக் கல அழிப்பு நோய் எனப்படுவது எமது உடலைப் பாதுகாப்பதற்காக இருக்கின்ற நிர்ப்பீடனத் சக்தி அதாவது நோய் எதிர்ப்புச் சக்தி எமது உடலின் கலங்களையே அழித்துவிடுவது. ( வேலியே பயிரை மேய்வதைப் போல)

இது பெண்களிலேதான் அதிகம் ஏற்படும்.ஆண்களிலே அரிதாகத்தான் ஏற்படும்.

இது பல்வேறுவிதமான பாதிப்புக்களை உடம்பிலே ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகளாவன

பசியின்மை , தசை /உடம்பு வலி, சோர்வான நிலை
மூட்டு வலிகள் -இவை கைவிரல் மூட்டு போன்ற சிறியவகை மூட்டுக்கலையே பாதிக்கும்.நிறைய விதமான பாதிப்புக்களை இந்த நோய் ஏற்படுத்தினாலும் பிரதானமான பாதிப்பு மூட்டுக்களிலேயே ஏற்படும்.
அடுத்து தோலிலே ஏற்படும் தழும்புகள் (Rashes)முக்கியமானவை. குறிப்பாக முகத்திலே ஏற்படும் தழும்பு.
இது வண்ணத்துப் பூச்சி வடிவிலே இருப்பதால் butterfly rash என்று அழைக்கப் படும்.இவை சூரிய ஒளி படுவதானால் அதிகரிக்கும்(photo sensitive).


முகத்தில் ஏற்படும் வண்ணத்துப் பூச்சித் தழும்பு 


அடுத்து இந்த நோயினால் சுவாசப் பை மற்றும் இதய மென்சவ்வுகளில் அழற்சி ஏற்படலாம்.
(pleritis and pericarditis)

சிறு நீரகங்களிலே பாதிப்பு ஏற்பட்டு உயர் குருதி அமுக்கம் ஏற்படலாம்(Hyper tension).இறுதியில் சிறுநீரகச் செயல் இழப்பும் ஏற்படலாம்(Renal failure).

மூளையிலே ஏற்படும் பாதிப்பால் வலிப்பு (Fits)ஏற்படலாம்.
குருதிக் குழாய்களில் அழற்சி ஏற்படலாம்(vasculitis).


தலை முடி உதிர்தல்(alopecia), குளிரான நேரத்தில் விரலுக்கு செல்லும் குருதியின் அளவு குறைவதால் விரல்
நுனிகள் நீலமாகுவதுடன் வலி ஏற்படும்  raynaud`s phenomena எனப்படும்
பிரச்சினை தோன்றலாம்.

இந்த நோய்விட்டு விட்டே பாதிப்புக்களை ஏற்படுத்தும்.அதாவது நோய் ஏற்பட்டு மருந்து எடுத்தவுடன் சுகமாகி  சிறிது காலத்தில் மீண்டும் ஏற்படும். இடைப்பட்ட காலத்தில் சுகதேகியாக இருப்பார்கள்.


இந்த நோய் பூரணமாகக் குணப்படுத்தப் பட முடியாதது.

ஆனாலும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தப்படக் கூடியது.

இந்த நோய்க்கான மருந்து இரண்டு வகைப்படும்.

1.நோய் தீவிரமான நிலையில் கொடுக்கப்படும் மருந்து
இது நோய் ஏற்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிகமாக அவர்களின் வலியினைப் போக்குவதற்காக கொடுக்கப் படுவது.

2.நோயினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான மருந்து
இந்த மருந்தினை தொடர்ச்சியாகப் பாவிப்பதன் மூலம் மீண்டும் நோய் ஏற்படாமலோ அல்லதுநோயின் தாக்கம் அதிகைப்பதையோ தடுக்கலாம்.

நோயுள்ளவர்கள் சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தழும்புகளால்(Rashes) ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறுநீரகம், மூளை போன்றவை பாதிக்கப்படுவதற்கான  சந்தர்ப்பம் அதிகம்.
இதய நோய்கள்,இரத்தப் புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் அதிகம்.ஆகவே இந்த நோயாளிகள் வைத்தியரின் அறிவுறுத்தல் படி நடந்து இந்த பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.அதையும் மீறி அவை ஏற்படும் போது ஆரம்பத்திலயே அடையாளம் காணப்பட வேண்டும்.

இந்த நோய்க்கான மாத்திரை பாவிப்பவர்களுக்கு பக்க விளைவாக கிருமித் தொற்றுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.ஆகவே அவர்களுக்கு சிறிதளவான காய்ச்சல் ஏற்பட்டாலேயே உடனே வைத்தியரை நாட வேண்டும்.

4 comments:

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

நிலாமதி said...

பதிவுக்கு மிகவும் நன்றி . இதுபற்றி எங்காவது பதிவு வருமா என் எதிர்பார்க்க்கொண்டிருந்தேன்.

Delli said...

பதிவுக்கு மிகவும் நன்றி .

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.