Monday, November 15, 2010

நீரழிவு ஒரு பூரண விளக்கம் 2


முந்திய இடுகையின் தொடர்ச்சி .....
நீரழிவினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பது எப்படி?

இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதே சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

இரத்தத்தில் சீனியின் அளவை எவ்வாறு கட்டுப்பாடாக வைத்திருப்பது?

உணவுக் கட்டுப்பாடு, மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசி மூலம் சீனியின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்படலாம்.

உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் மாத்திரைகள் பாவிப்பதாலோ அல்லது இன்சுலின் ஊசி பாவிப்பதாலோ மட்டும் சீனியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா?

இல்லை. 
உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் எப்படித்தான் ஒழுங்காக மருந்துகளை பாவித்தாலும் சீனியினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது.


சிலவேளைகளில் மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் மாத்திரம் சீனி கட்டுப்படுத்தப்படலாம் 
ஆனாலும் உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் மாத்திரைகள் மட்டும் மூலம் சீனி கட்டுப்படுத்தப்பட முடியாது.

உணவுக்கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?

உணவுக்கட்டுப்பாட்டின் அடிப்படை அம்சங்களாவன
1.சீனியைக் குறைத்தல் முடியுமானவரை தவிர்த்தல்
2.கொழுப்புத் தன்மை கூடிய உணவுகளைத் தவீர்த்தல்
3.நார்ப்பதார்த்தங்கள் கூடிய உணவின் பங்கை அதிகரித்தல்
4.ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவீர்த்தல்
   அதாவது ஒரு நாளில் சாப்பிடும் மூன்று பிரதான உணவுகளை பிரித்து
    நான்காகவோ ஐந்தாகவோ சாப்பிடுதல்

மேலும் டயட்டீசியன் ஒருவரை சந்தித்து உங்களுக்கென முழுமையான உணவு அட்டவனையை ஏற்படுத்தி அதற்கேற்ப உணவு உண்ணுதல் உகந்தது.


நீரழிவு நோயோடு நீண்ட நாள் உயிவாழ வேண்டும் என்றால் நாவடக்கம் அவசியம்.


மாத்திரைகள் , இன்சுலின் பாவிப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

மாத்திரையோ அல்லது இன்சுலினோ பாவிப்பவர் எனில் அவற்றை வைத்தியர் சொன்ன அளவிலே ஒவ்வொருநாளும் சரியாகப் பாவிக்க வேண்டும்.
 சில நாட்களில் மாத்திரை எடுக்காமல் மறந்து விடுவதினால் எந்தவிதமான நன்மையும் இல்லை.

மேலும் தொடர்ச்சியாக மாதம் ஒருமுறையாவது ரத்தத்தில் சீனியின் அளவை அளந்து கொள்வது அவசியம்.


எதற்காக சீனியின் அளவு இரத்தத்திலே அளக்கப்பட வேண்டும்?

இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாக இருந்தால் அது நீங்கள் சரியாக உணவுக்கட்டுப்பாடு மேற் கொள்ளாததினால்   அல்லது மாத்திரை ஒழுங்காக உட் கொள்ளாததினால் அல்லது நீங்கள் எடுக்கும் மாத்திரையின்/ இன்சுலினின் அளவு போதியதாக இல்லாததினால் ஏற்பட்டிருக்கலாம்.

ஆகவே குறைந்தது மாதம் ஒருமுறையேனும் சீனியின் அளவை இரத்தத்தில் அளப்பதன் மூலம் அது அதிகரித்து இருக்குமாயின் மற்றைய காரணிகளை நிவர்த்தி செய்தபின் உங்கள் மருந்தின் அளவை அதிகரிக்க வைத்தியருக்கு உதவியாக இருக்கும்.

இரத்தத்தில் சீனியின் அளவு எவ்வாறு அளக்கப்படலாம்?

ஏதாவது வைத்திய சாலையின் ஆய்வு கூடத்தில் அளக்கப்படலாம்.
அல்லது மிகவும் இலகுவாக உங்கள் வீட்டிலேயே குளுக்கோ மீட்டர் என்ற உபகரணம் மூலம் அளந்து கொள்ளலாம்.

இப்போது சில ஆயிரங்களில் ஒரு குளுக்கோ மீட்டர் வாங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு வாங்கிக் கொண்டால் நீங்கள் வைத்திய சாலைக்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இலகுவாக உங்கள் நீரழிவு நோயின் கட்டுப்பாட்டைக் கணித்துக் 
கொள்ளலாம்.

2 comments:

சுப்புரத்தினம் said...

பயனுள்ள தகவல்

நன்றி

சுப்புரத்தினம்

Anonymous said...

great post